எனக்கு குடும்பம்தான் முக்கியம்: மமிதா பைஜு

எனக்கு குடும்பம்தான் முக்கியம்: மமிதா பைஜு

2 mins read
dc8abdf0-46c7-48df-aa30-5a3db1d77a9e
‘கர’ படத்தில் ஒரு காட்சி. - படம்: மனி கன்ட்ரோல்

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘கர’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார் மமிதா பைஜு.

அண்மையில் தமிழக ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அந்த அனுபவம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.

“இயக்குநர் விக்னேஷ் ராஜா என்னைச் சந்திக்க விரும்பினார். அப்போது முழுக் கதையையும் விவரித்தார். ஒருசில இடங்களில் எனக்கு சிறு சிறு சந்தேகங்கள் இருந்தன. அவற்றை அப்போதே அவர் தெளிவுபடுத்திவிட்டார்.

“ராமநாதபுரம் பின்னணியில் கிராமத்துப் பெண்ணாக நடித்திருக்கிறேன். படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதும் ஒவ்வொரு நாளும் அந்த கதாபாத்திரத்துக்கான ஒப்பனையுடன் கேமரா முன் வந்து நின்றதும், அந்த பாத்திரமாகவே மாறிவிடுவேன்.

“என் கதாபாத்திரத்தின் பெயர் செல்வி. மிகவும் உற்சாகமாகப் பணியாற்றினேன்.

“சில மலையாளப் படங்களில் ஒப்பனையே இல்லாமல் நடித்திருக்கிறேன். அதேபோல் இந்தப் படத்திலும், கிராமத்துப் பெண் என்பதால் எனக்கு ஒப்பனை தேவைப்படவில்லை.

தனுஷ் பற்றி?

“நான் தனுஷ் ரசிகை. அவர் நடித்த படங்களில் அவரது வசனம், முகபாவம், நடிப்பு அனைத்தையும் உன்னிப்பாகக் கவனிப்பேன். அதிலிருந்து நிறைய கற்றுக்கொள்ள முடியும். அவருடன் இணைந்து நடித்ததில், நடிப்புப் பயிற்சிக்கு வந்ததுபோல் இருந்தது.

அவருடன் இணைந்து பணியாற்றுபவர்களுக்கு வசதியாக இருக்கும்.

“நான் முந்தைய படங்களில் துறுதுறுப் பெண்ணாக நடித்திருக்கிறேன். ‘பிரேமலு’ படத்தில் ரீணு, ‘ட்யூட்’ படத்தில் குறள் ஆகிய கதாபாத்திரங்கள் எனது உண்மையான வாழ்க்கையிலிருந்து மாறுபட்டவை. நான் கொஞ்சம் அமைதியான பெண்தான்.

“நான் தொடக்கத்தில் மலையாளத்தில் சிறுசிறு வேடங்களில் தான் நடித்தேன். ஒரு கட்டத்துக்கு மேல்தான் பெரிய கதாபாத்திரங்களில் ஒப்பந்தமானேன். அதன் பின்னர் தமிழில் வாய்ப்புகள் கிடைக்க, இப்போது பல படங்களில் நாயகியாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளேன்.

குடும்பம்?

“என் அப்பா மருத்துவர். அவரை எப்போது சந்தித்தாலும், எனது உடல், மன நலனைக் காப்பது குறித்து நிறைய அறிவுரைகளைக் கூறுவார். நிறைய வேலை செய்து மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது என்பார்.

“எனக்கு என் குடும்பம் மிகவும் முக்கியம். குடும்பத்தாருடன் நிறைய நேரம் செலவிட முடியவில்லை என்ற குறையும் வருத்தமும் உள்ளது. அதை வரும் நாள்களில் சரிசெய்யப் பார்க்கிறேன்.

சூர்யாவுடன் இணைந்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படம் நான் ஜாலியாக நடித்த படங்களில் ஒன்று என்கிறார் மமிதா.

குறிப்புச் சொற்கள்