திரையரங்கிற்குள் வெடி; தெறித்து ஓடிய பார்வையாளர்கள்

திரையரங்கிற்குள் வெடி; தெறித்து ஓடிய பார்வையாளர்கள்

1 mins read
76b3f74e-4d06-4dc3-9ecb-6c555fbf6083
சல்மான்கானின் ‘டைகர்-3’ படம் திரையிடப்பட்ட அரங்கில் வெடிகளைக் கொளுத்திப் போட்ட ரசிகர்கள். - படங்கள்: ஊடகம்

மும்பை: இந்திப் படவுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சல்மான்கான் நடிப்பில் அண்மையில் ‘டைகர்-3’ படம் வெளியானது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம், மாலேகானில் உள்ள மோகன் திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை தீபாவளியன்று அப்படத்தைக் காணச் சென்றவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சல்மான்கான் திரையில் தோன்றியதும் அவருடைய ரசிகர்கள் சிலர் அந்தத் திரையரங்கிற்குள்ளேயே வெடிகளையும் மத்தாப்புகளையும் கொளுத்தினர். இதனால், மற்ற ரசிகர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடினர்.

வேறு சில திரையரங்குகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

சல்மான்கான் படம் வெளியான திரையரங்குகளில் இத்தகைய நிகழ்வு இடம்பெற்றது இது முதன்முறையன்று. கடந்த 2021ஆம் ஆண்டு ‘அந்திம்’ படம் வெளியானபோதும் பல திரையரங்குகளில் வெடிகளை வெடித்தது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன.

இந்நிலையில், “உங்களது உயிருக்கும் மற்றவர்களின் உயிருக்கும் ஆபத்தாக முடியலாம் என்பதால் திரையரங்கினுள் வெடிகளைக் கொண்டுசெல்ல வேண்டாம் என்று ரசிகர்களைக் கேட்டுக்கொள்கிறேன். திரையரங்கிற்குள் வெடிகளை எடுத்துச் செல்வதை அனுமதிக்க வேண்டாம் என்று திரையரங்க உரிமையாளர்களையும் பாதுகாவலர்களையும் கேட்டுக்கொள்கிறேன்,” என்று சல்மான்கான் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, மோகன் திரையரங்கினுள் வெடி வெடித்த சந்தேகத்தின்பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அத்திரையரங்க நிர்வாகத்தின்மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்புச் சொற்கள்