‘ராசியான கதாநாயகி’ என்ற பெயருக்குச் சொந்தக்காரராக வலம் வருகிறார் பூஜா ஹெக்டே. ‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 69’ எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார் இவர்.
‘ராசியானவள்’ என்னும் பெயரைப் பெற நான் நிறைய சிரமப்பட்டேன். நானும் நிறைய தோல்விகளைச் சந்தித்த நடிகைதான். அப்போதெல்லாம் என் நேரத்தை மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க பயன்படுத்துகிறேன் என்பதை நினைக்கும்போது என்னுடைய சிரமங்கள் எல்லாம் காணாமல் போய்விடும் என அண்மைய நேர்காணல் ஒன்றில் கூறினார் பூஜா.
மேலும், யாரோ ஒரு ரசிகர், எங்கோ ஒரு மூலையில் ‘ஆல வைகுண்டபுரம்’ படத்தில் இடம்பெற்ற ‘புட்ட பொம்மா’ பாடலைப் பார்த்தோ அல்லது ‘பீஸ்ட்’ படத்தில் வரும் ‘அரபிக் குத்து’ பாட்டுக்குத் தாளம் போட்டுக்கொண்டோ மகிழ்ச்சியாக இருந்தார் என்றால் அதுதான் என் வெற்றி என்றார் அவர்.
நிறைய சிரமங்களுக்குப் பிறகு எந்தவொரு உதவியும் இன்றி தற்போது இருக்கும் நிலைக்கு வந்துள்ளேன். நான் எப்பொழுதும் வெற்றியைக் கொண்டாடியது இல்லை. என் வாழ்க்கையில் நான் சந்தித்த பல தோல்விகள்தான் என்னைப் பக்குவமாக்கியுள்ளன. அதுதான் இப்பொழுது நான் இருக்கும் இடத்திற்கு என்னைக் கொண்டு வந்துள்ளது என அந்த நேர்காணலில் பூஜா சொன்னார்.
நேர்த்தியாக நடனம் ஆடும் கதாநாயகர்கள் உடன் அதிகம் நடிக்கிறீர்கள். அது உங்களுக்குச் சவாலாக இல்லையா? என்ற கேள்விக்கு, “நான் சந்தித்த மிகப்பெரிய சவாலே இதுதான். ஹிரித்திக் ரோஷன் தொடங்கி ராம் சரண், அக்சய் குமார், அல்லு அர்ஜூன், விஜய் ஆகிய அனைவரும் நடனத்தில் தேர்ந்த நடிகர்கள். நான் சிறுவயதில் நடனப் பள்ளியில் சேர்ந்து நடனம் பயின்றேன். அது எனக்குத் தற்போது கைகொடுக்கிறது,” என்றார் அவர்.
ஆனால், கடுமையான உழைப்பிற்குப் பிறகு உருவாகும் நடனம் மிகப்பெரிய வெற்றி பெறும்போது அனுபவித்த சிரமங்கள் அனைத்தும் மறைந்துபோய்விடும் எனச் சிரித்துக்கொண்டே சொன்னார் பூஜா.
‘நம்பர் 1 நடிகை’ போட்டியில் நம்பிக்கை இருக்கிறதா? எனப் பூஜாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அது ஒரு மாயை. அதில் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. மக்கள் விருப்பம், இயக்குநர்கள் தேர்வு இவை அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கும். நல்ல நடிகை என்ற பெயர் மட்டும் போதும். அது ஒன்றுதான் நிலைக்கும்,” என்றார் அவர்.
மேலும், ‘நம்பர் 1 நடிகை’ ஆக இருப்பதைவிட திரையுலகிற்கு வரும் இளம் நடிகைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கவே தான் விரும்புவதாகவும் கூறினார் பூஜா.
தொடர்புடைய செய்திகள்
அதற்கு ஏற்றவாறு கதைகளைத் தேர்வுசெய்து நடிக்கவும் நான் முயற்சி செய்து வருகிறேன் எனக் கூறி பூஜா புன்னகைத்தார்.
‘விஜய் 69’ குறித்து ஏதேனும் தகவல் பகிரமுடியுமா என்ற கேள்விக்கு, “அரபிக் குத்து’ பாடலுக்கு இளைய தளபதி விஜய்யுடன் நடனமாடி நான் சிறிது உடல் மெலிந்தேன் என நினைக்கிறேன். அந்தப் பாடலுக்கு விஜய் மிகவும் சுலபமாக நடனம் ஆடினார். எனக்குத் தான் அது சிரமமாக இருந்தது. அந்தப் பாட்டுக்கு இணையான நடன அசைவுகள் நிறைந்த பாடல் ஒன்று ‘விஜய் 69’ படத்தில் உள்ளது. பொறுத்திருங்கள். தற்போதைக்கு இதை மட்டும்தான் சொல்ல முடியும். மற்றவை அனைத்தும் படம் வெளியாகும் அன்று சொல்கிறேன்,” எனக் கூறி விடைபெற்றார் பூஜா ஹெக்டே.