நண்பர்கள் எடுத்த குறும்படம் மூலம் எதிர்பாராத விதமாக தாம் பிரபலமானதாகவும் அதுவே தாம் திரைப்பட நடிகையாக மாறக் காரணமாகிவிட்டதாகவும் கூறியுள்ளார் அதுல்யா ரவி.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ‘அழகு தேவதை’, ‘சாட்டை’, ‘நாடோடி-2’ எனப் பல படங்களில் நாயகியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் இவர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘டீசல்’ படத்தில் நடித்திருந்தார். தற்போது ‘மிஸ்டர் எக்ஸ்’ உட்பட மூன்று தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறாராம். இந்த இரண்டாவது சுற்றிலும் தம்மால் கோடம்பாக்கத்தில் முத்திரைப் பதிக்க முடியும் என்கிறார் அதுல்யா.
“கல்லூரியில் படிக்கும்போது நண்பர்கள் சிலர் கைக்காசு போட்டு சாதாரண கேமராவில் ‘காதல் கண் கெட்டதே’ என்கிற குறும்படத்தை எடுக்க நினைத்தோம். பாதி வேலைகள் முடிவடைந்த நிலையில், அதைத் திரைப்படமாக வெளியிட முடிவானது. ஆனால், படம் வெளியாகும் முன்பே ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.
“என் புகைப்படம், குறிப்பாக கண்களை சமூக ஊடகங்களிலும் கைப்பேசியிலும் பரவலாகப் பகிர்ந்தனர். இதுதான் கடைக்கோடி ரசிகர்வரை என்னைக் கொண்டு சேர்த்தது.
“அதிக பொருள் செலவில் உருவாகும் திரைப்படங்கள் வெற்றி பெறுவது பெரிய விஷயம் அல்ல. ஆனால், பெரிய முதலீடு இன்றி உழைப்பால் மட்டுமே உருவான ‘காதல் கண் கெட்டதே’ படம் வெற்றி பெற்றது பெரிய விஷயம்தான்,” என்கிறார் அதுல்யா.
‘டீசல்’ படம் பெரிதாக பேசப்படும் எனத் தாம் எதிர்பார்க்கவே இல்லை என தினமலர் ஊடகப் பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவரும் ஆர்யாவும் நடித்துள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
‘காந்தாரா’, ‘அமரன்’ போன்ற படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களுக்கு பாராட்டுகள் கிடைப்பது வரவேற்கத் தகுந்தது என்றும் கூறுகிறார்.
“பொங்கல், தீபாவளிப் பண்டிகையைக் குடும்பத்துடன் சொந்த ஊரில் கொண்டாடுவதே எனது வழக்கம்.
“நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள். சிறுமியாக இருந்தபோது வீட்டில் வளர்த்த மாடுகளை நான்தான் குளிப்பாட்டுவேன்.
“பொங்கல் பண்டிகை வந்துவிட்டால் மாடுகளின் கொம்புகளுக்கு நான்தான் வர்ணம் பூசுவேன்,” என்று அண்மையப் பேட்டியில் உற்சாகத்துடன் பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார் அதுல்யா.
இவரது குடும்பத்தார் பொங்கல் சமயத்தில் பல போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்குவார்களாம்.
அதுல்யாதான் சர்க்கரைப் பொங்கலைத் தயாரித்து அனைவருக்கும் பரிமாறுவாராம்.
“பொங்கல் பண்டிகைக் காலத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டியை ஆவலுடன் பார்ப்பேன். இரண்டு நாள்களுக்கு எங்கள் ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்,” என்று கூறியுள்ளார் அதுல்யா ரவி.

