திரையுலகில் வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராகத் திகழ்பவர் சாய் பல்லவி.
தமது திறமையான நடிப்பால் தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார்.
ஆடம்பரம் இல்லாத எளிமையான நடிகை என்றால் பலரும் சாய் பல்லவியைத் தான் கூறுவர். அதற்கேற்ப தமது கதாபாத்திரத்திலும் எதார்த்தமான, நேர்த்தியான நடிப்பை அவர் வெளிப்படுத்துவார்.
நடிகர், நடிகைகளுக்குக் கிடைக்கும் உண்மையான வெற்றி ரசிகர்களின் அன்புதான் என அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த கூடுதல் விவரங்களை இதில் பார்ப்போம்.
சிறு வயதில் இருந்தே நடனத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான அவர், பள்ளி, கல்லூரிகளில் பல நடனப் போட்டிகளில் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளார்.
முறையாக நடனப் பயிற்சியைப் பெறாத சாய்பல்லவி, தமது தாயின் உதவியுடன், தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு நடனமாடி இருக்கிறார்.
2015 ஆம் ஆண்டில் ‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர், தமது கல்லூரிப் படிப்பையும் தொடர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
பிரேமம் படத்தில் நடிப்பதற்கு முன்பு ‘கஸ்தூரி மான்’, ‘தாம்தூம்’ உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்திருக்கிறார் சாய் பல்லவி.
கடைசியாக தமிழில் வெளியான ‘அமரன்’, தெலுங்கில் வெளியான ‘தண்டேல்’ ஆகிய இரு படங்களும் மிகப் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன.
தற்போது பான் இந்தியப் படமாக உருவாகும் ‘ராமாயணம்’ படத்தில் சீதை வேடத்தில் அவர் நடிக்கிறார்.
இந்நிலையில், அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், “ஒவ்வொரு படத்திலும் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன். அப்போது தான் நேர்மையான கருத்துகளை ரசிகர்களுக்கு என்னால் சொல்ல முடியும்.
“திரையில் என் கதாபாத்திரத்தைப் பார்க்கும் ரசிகர்கள் பலரும், அதே உணர்வுடன் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என நினைப்பேன். அப்படி நடந்தால் அதைத் தான் உண்மையான வெற்றியாக நான் கருதுவேன்,” எனக் கூறியுள்ளார் சாய்பல்லவி.
விருது வாங்குவது தமக்கு முக்கியமில்லை என்றும் ரசிகர்களின் அன்புதான் எல்லாவற்றிற்கும் மேலானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரசிகர்களின் அன்பை முழுமையாகப் பெற தான் எப்போதும் உழைத்து வந்ததாகவும் அவர்கள் இல்லையென்றால் என்னுடைய வளர்ச்சி திரைத்துறையில் சாத்தியமே இல்லை என்றும் நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.