தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துணிச்சலான நாயகியைத்தான் ரசிகர்கள் விரும்புகின்றனர்: ஷ்ரத்தா

3 mins read
898f16a0-4b88-423c-949a-64742409055c
ஷ்ரத்தா ஸ்ரீநாத். - படம்: ஊடகம்

இந்தியிலும் பரவலாகத் தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

‘தி கேம்’ இணையத் தொடருக்காக தற்போது சென்னையில் முகாமிட்டுள்ளார்.

இந்தத் தொடரின் இயக்குநர் கமல்ஹாசனுடன் பல படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

கணினி, கைப்பேசி விளையாட்டுகளை உருவாக்கும் தொழில்நுட்பக் கலைஞரின் வாழ்க்கையில் நடக்கும் சில திகிலான சம்பவங்கள்தான் இப்படத்தின் கதையாம். ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக நகரும் என்று இயக்குநரை முந்திக்கொண்டு ஷ்ரத்தாவே உறுதியளிக்கிறார்.

“இந்தக் கதையில் எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இத்தொடரின் ஒவ்வொரு பகுதியும் ஒரு முழுத் திரைப்படத்தைப் பார்த்த உணர்வைத் தரும்.

“பொதுவாக என்னைப் பார்க்கும் பலர், ‘ஏன் எப்போதும் துணிச்சலான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறீர்கள்’ எனக் கேட்கிறார்கள்.

“‘விக்ரம் வேதா’ படத்தில் எதையும் துணிச்சலான, ஒருவித ‘கெத்து’டன் கூடிய கதாபாத்திரம் அமைந்தது. அதனால் அந்தப் படத்தில் அந்த வேடம் பளிச்செனத் தெரிந்தது.

“அதன் பிறகும் அவ்வாறான கதைகள் அமைந்தபோது சிலவற்றை மறுக்க முடியவில்லை. என்னைப் பொறுத்தவரை கதாநாயகனுக்கு இணையாக சித்திரிக்கப்படும் நாயகிகளை ரசிகர்கள் வெகுவாக ரசித்து வரவேற்கிறார்கள்.

“அந்த வகையில் எனக்கும் மகிழ்ச்சிதான்,” எனச் சொல்லும் ஷ்ரத்தா, தனது படங்களுக்கு இடையேயான இடைவெளி அதிகமாக இருப்பதை ஒப்புக்கொள்கிறார்.

நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதைவிட, நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்ற தமது கொள்கைதான் இதற்குக் காரணம் என்றும் சொல்கிறார்.

“அனைத்து இந்திய மொழிகளிலும் நடித்து வருகிறேன். ஆனால், தமிழில் நான் நடித்துள்ள படங்களின் எண்ணிக்கை குறைவுதான். எனினும், தமிழ் ரசிகர்கள் என்னை மறக்கவில்லை.

“கிடைத்த நல்ல பெயரை இனிமேலும் தக்கவைக்க வேண்டும்; மேலும் பாராட்டுகளைப் பெற வேண்டும் எனும் பொறுப்பும் விருப்பமும் மனத்தில் அதிகரித்து வருகின்றன.

“தெலுங்கில் நடித்த ‘ஜெர்சி’ படம், தமிழிலும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்துள்ளது. அதில், ‘சாரா’ என்ற பாத்திரத்தில் நடித்திருந்தேன். அதன் பிறகு பெரிய வணிக வளாகங்களுக்குச் செல்லும்போது பலரும் என்னைக் கண்டதும் நலம்விசாரித்து, செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள்.

“ஓடிடி தளம் அனைத்து மொழிப் படங்களையும் கலைஞர்களையும் இணைக்கும் பாலமாக உள்ளது. இனி இந்திய திரைப்படங்கள் அனைத்தும் ஒரே திரையுலகத்தில் இருந்து வெளிவரும் படைப்புகளாகவே கருதப்படும் என நினைக்கிறேன்,” என்கிறார் ஷ்ரத்தா.

நடிகர் மாதவனுடன் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ள இவர், இந்திய அளவில் அனைவருக்கும் தெரிந்த நடிகர்களில் மாதவன் முக்கியமானவர் என்று அண்மைய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

“தென்னிந்தியாவில் இருந்து மும்பை வந்து இந்தித் திரையுலகில் நடிக்க வாய்ப்புப் பெறுவது பெரிய விஷயம். ஆனால், மாதவனோ இத்தனை ஆண்டுகளாக இந்தித் திரையுலகில் தாக்குப்பிடித்து நிற்கிறார். இது சாதாரண விஷயமல்ல. அவர் இயக்கிய ‘நம்பிராஜன் பயோபிக்’ எனக்கு மிகவும் பிடித்தமான படங்களில் ஒன்று.

“அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கும் மிகுந்த ஆசை உண்டு. அது விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன்.

“தமிழ் ரசிகர்களின் ஆதரவு எப்போதும்போல் நீடிக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன்,” என்று பேட்டியில் கூறியுள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

விரைவில் நேரடித் தமிழ்ப் படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்