இணையத்தில் கசிந்த ‘கருப்பு’ படக் காட்சியால் ரசிகர்கள் அதிர்ச்சி

இணையத்தில் கசிந்த ‘கருப்பு’ படக் காட்சியால் ரசிகர்கள் அதிர்ச்சி

2 mins read
c0113ed2-baea-4691-8783-c922e4e8c488
‘கருப்பு’ படத்தில் ஒரு காட்சி. - படம்: விகடன்

விஜய்யைத் தொடர்ந்து நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் கவலையிலும் அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளனர்.

காரணம், ‘ஜனநாயகன்’ படத்தையடுத்து சூர்யாவின் ‘கருப்பு’ படமும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மே 14ஆம் தேதியன்று சிறப்புக் காட்சியாக தமிழகத்தில் திரையிடப்பட இருந்தது ‘கருப்பு’ படம். ஆனால் சில சூழல்களால் படம் வெளியாகவில்லை. இந்நிலையில், வடமாநிலங்களில் சில இடங்களில் (மும்பை, புனே, வாரணாசி) ‘கருப்பு’ படம் திரையிடப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது.

படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன. இது படத்தின் தயாரிப்பாளருக்குக் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அவசரக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தனர். இந்தக் கூட்டத்தில் ‘கருப்பு’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு, ஞானவேல்ராஜா, தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளான தாணு, டி.சிவா, போஸ் லிங்குசாமி, கதிரேசன் எனப் பலரும் ‘கருப்பு’ தயாரிப்பாளருக்கு ஆதரவாகக் குரல்கள் எழுப்பியதுடன், ‘கியூப்பை’யும் கண்டித்துள்ளனர்.

தமிழ்த் திரைப்படங்களை வெளியிடுவதற்கு உதவும் ‘கியூப்’ தொழில்நுட்ப நிறுவனத்தின் அலட்சியம்தான் ‘கருப்பு’ படம் இணையத்தில் கசியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரான டி.சிவா கூறுகையில், “எங்களுடைய பெரிய ஆதாரமாக இருக்கக்கூடிய ‘கியூப்’பிலிருந்து இந்தத் திரைப்படம் வெளியாகி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. எங்களுக்கு முறையான பதில் வேண்டி ‘கியூப்’பிற்கு வந்திருக்கிறோம்,” என்றார்.

மனிதத் தவறுதான் பிரச்சினைக்குக் காரணம் என்று ‘கியூப்’ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

“ஆனால் இதை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. 140 கோடி ரூபாய் படத்தின் தலையெழுத்தை ஒரு பணியாளர் மாற்றுவதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்படித்தான் ஓர் உதவிப் படத்தொகுப்பாளரின் கவனக்குறைவு காரணமாக ‘ஜனநாயகன்’ படம் வெளியாகிவிட்டது என்று கூறினர்.

“ஊழியர் ஒருவரது கவனக்குறைவினால் ‘கருப்பு’ வெளியாகிவிட்டது என்று சொன்னால், இது எங்கே போய் நிற்கும்?” என்று கேள்வி எழுப்பி உள்ளார் சிவா.

“க்யூப் மீது எங்களுக்கு அபரிமிதமான நம்பிக்கை உண்டு. இதற்கு முன்பு இப்படி நடந்ததே கிடையாது. தங்களிடம்தான் தவறு இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். எனவே உரிய நஷ்டஈடு தருவதாகக் கூறியுள்ளனர்,” என்கிறார் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு.

குறிப்புச் சொற்கள்