தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொருந்தாத வேடத்தால் ரசிகர்கள் வெறுத்தனர்: அனுபமா

2 mins read
f5d52f55-bd82-468a-a5e8-9af71b393f89
நடிகை அனுபமா பரமேஸ்வரன். - படம்: ஊடகம்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அனுபமா பரமேஸ்வரன். மலையாளத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

அப்படத்தைத் தொடர்ந்து தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கொடி’, ஜெயம் ரவியுடன் ‘சைரன்’ ஆகிய படங்களில் அனுபமா நடித்தார்.

இருப்பினும், அண்மையில் வெளியான ‘டிராகன்’ படத்தில் அனுபமாவின் நடிப்பு அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் ‘பைசன்’ படமும் தீபாவளி வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.

தெலுங்கில் அவர் நடித்திருக்கும் ‘பர்தா’ இம்மாதம் 22ஆம் தேதி திரை காண்கிறது. அதில் நடிகை சங்கீதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

பாரம்பரியம், போராட்டம் போன்ற பல உணர்வுகளின் கலவையாக அப்படம் அமைந்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தெலுங்கில் ‘டில்லு ஸ்கொயர்’ படத்தில் நடித்ததனால் மக்கள் அவரை வெறுத்ததாக நேர்காணல் ஒன்றில் அனுபமா கூறியிருந்தார்.

மேலும், அப்படத்தில் தனக்கு வலுவான கதாபாத்திரம்தான் என்றாலும் வர்த்தக ரீதியில் வெற்றியடையும் படங்களில் வருவது போன்ற வேடம் அது இல்லை என்றார் அவர்.

“அந்தக் கதாபாத்திரம் தவறு என நான் குறிப்பிடவில்லை. அது எனக்குப் பொருந்தவில்லை என்பதே எனது கருத்து. அப்படத்தில் வசதியில்லாத ஆடைகளையே நான் அணிந்திருந்தேன். அந்த வேடத்திற்கு அது தேவைப்பட்டது.

“கவர்ச்சிகரமான ஆடைகளை அணிந்து அந்தப் படத்தில் நடித்தது எனக்குச் சற்று கடினமாகத்தான் இருந்தது. சொல்லப்போனால், அதில் நடிப்பதற்குத் தயங்கினேன்.

“நான் நினைத்ததைப் போன்றே அதில் நடித்ததற்காகப் பல எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டேன்,” என அனுபமா கூறினார்.

இதற்கிடையே, அண்மையில் ‘பர்தா’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. தெலுங்கில் அனுபமாவுக்குக் கிடைக்கும் வரவேற்பு குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்குக் கண்கலங்கிய நிலையில், “தெலுங்கு ரசிகர்கள் என்னை ஒரு கதாநாயகனாகப் பார்க்கின்றனர். அது என்னுடைய நற்பேறு. அதை நான் அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன்”, எனக் கூறினார்.

தழுதழுத்த குரலில் பேசிய அனுபமாவை உடனிருந்தவர்கள் ஆறுதல்படுத்தினர்.

அனுபமா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘பர்தா’ திரைப்படம் பாரம்பரியம் என்ற பெயரில் சமூகத்தில் உலாவரும் பிற்போக்குத்தனங்களைச் சாடும் விதத்தில் அமைந்துள்ளது என்றும் அதேநேரத்தில் ஒற்றுமை, பெண்களுக்கான முன்னேற்றம் ஆகியவற்றை தைரியமாக எடுத்துரைக்கும் படமாக அது உருவாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்