‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...’ எனும் பாடல் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெயா சீல்.
2000ஆம் ஆண்டு வெளியான ‘பெண்ணின் மனதைத் தொட்டு’ படத்தின் பாடல் அது. பிரபுதேவாவுக்கு ஜோடியாக அப்படத்தில் அவர் நடித்திருப்பார்.
குடும்ப வாழ்க்கைக்காகத் திரையுலகிலிருந்து சற்று விலகியிருக்கும் ஜெயா, தென்னிந்திய மொழிகளில் தனக்கேற்ற கதை கிடைத்தால் மீண்டும் நடிக்கத் தயார் என அண்மையில் ஆனந்த விகடனுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருந்தார்.
தற்போது கோல்கத்தாவில் கணவர், இரு பிள்ளைகளோடு வசித்து வரும் அவர், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
“நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த நான், சிறு வயது முதலே நடனம் பயில ஆரம்பித்தேன். நடிப்பின்மீதும் ஆர்வம் இருந்ததால் அதையும் கற்றுக்கொண்டேன். இருப்பினும், எனது கனவு என்னவோ மருத்துவராக வேண்டும் என்பதுதான்,” என அந்த நேர்காணலைப் புன்னகையோடு தொடங்கினார் ஜெயா.
“அதற்காகத் தான் பள்ளியில் உயிரியல் பிரிவை எடுத்துப் பயின்றேன். ஒருகட்டத்தில் நடிப்புதான் என்னுடைய வாழ்க்கை என்பதை நான் புரிந்துகொண்டேன். அதனால், புதுடெல்லியில் நடிப்புக்குப் பயிற்சி அளிக்கும் பள்ளியில் சேர்ந்தேன். எனக்குத் திரையுலகம் புதிதல்ல. எனது தந்தை திரைப்பட விநியோகிப்பாளராக இருந்தவர்,” என அவர் கூறினார்.
1999ஆம் ஆண்டு இந்திப் படம் ஒன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும் அடுத்த ஆண்டே ‘பெண்ணின் மனதைத் தொட்டு’ வாய்ப்பு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
“எனக்கு தென்னிந்தியப் படங்களும் இளையராஜாவின் இசையும் மிகவும் பிடிக்கும். அப்படத்தில் கதாநாயகி ஒரு மருத்துவர் என அதன் இயக்குநர் எழில் கூறிய உடனே நடிக்க ஒப்புகொண்டேன். என்னுடைய அடுத்த படம் ‘சாமுராய்’. அதிலும் எனக்கு மருத்துவர் வேடம் தான்,” அக்கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் தனது மருத்துவர் கனவு நிறைவேறி விட்டதாக ஜெயா சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், ‘கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா’ பாட்டு தனக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என்றார் அவர்.
“பெண்ணின் மனதைத் தொட்டு’ படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகின. ஆனாலும், அந்தப் பாட்டை இன்னும் மக்கள் மறக்கவில்லை. சென்னையில் மட்டுமன்றி லண்டன், சிங்கப்பூர், என வெளிநாடுகளுக்குப் போனாலும் ‘கண்ணுக்குள்ள உன்னை வைத்தேன்’ பாடல் நடிகையாகதான் என்னை அடையாளம் காண்கின்றனர்,” எனக் கூறி அப்படத்தின் இசையமைப்பாளருக்கும் இயக்குநருக்கும் அவர் நன்றி நல்கினார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம், பெங்காலி, ஒடியா, அசாமி ஆகிய எட்டு மொழிகளில் 19 படங்கள் அவர் நடித்திருக்கிறார்.
பக்கத்து வீட்டுப் பெண் போன்ற சாயல் எனக்கு இருப்பதாகத் தான் நடித்த அனைத்து மொழி இயக்குநர்களும் தன்னிடம் தெரிவித்ததாகவும் ஜெயா கூறினார்.
“‘சாமுராய்’ படத்தில் வரும் கவிதாவின் குணம்தான் என்னுடைய உண்மையான குணம். சமுதாயத்தில் நடக்கும் தவறுகளைத் தட்டிக்கேட்கும் பழக்கம் எனக்கு உள்ளது,” என்றார் அவர்.
தனது கணவர் விக்ரம் ஜோஷ் ஒரு இசையமைப்பாளர் எனக் கூறிய அவர், 55 படங்களுக்குமேல் விக்ரம் இசையமைத்துள்ளதாகவும் அதில் இரு படங்கள் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

