‘தக் லைஃப்’ படத்தின் படுதோல்வியை அடுத்து, மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அநேகமாக, அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மாரி செல்வராஜின் ‘பைசன்’ படத்தில் மட்டும் கவனம் செலுத்திவந்தார் துருவ் விக்ரம்.
கதைக்கேற்ப தனது உடற்கட்டைப் பலவிதமாக மாற்ற வேண்டியிருந்ததாம். தற்போது படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் மீண்டும் பழைய தோற்றத்துக்குத் திரும்பியுள்ளார்.
இந்நேரம் பார்த்து, மணிரத்னம் தரப்பில் இருந்து அணுக உடனடியாக கால்ஷீட் ஒதுக்க துருவ் சம்மதித்திருப்பதாகத் தகவல். இதற்கிடையே, மகனை அடுத்து தந்தை விக்ரமும் அடுத்த படத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார்.
‘96’ படத்தை இயக்கிய பிரேம்குமார், அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கத் திட்டமிட்டிருந்தது குறித்தும் அதில் விஜய் சேதுபதி நடிக்க முடியாத சூழல் நிலவுவது குறித்தும் ஊடகங்களில் அண்மையில் செய்தி வெளியானது.
இதையடுத்து, விக்ரமை நாயகனாக வைத்து புதுப்படத்தைத் தொடங்க முடிவு செய்துவிட்டார் பிரேம்குமார்.
இந்தப் படம் வெளியான பின்னர், ‘மெய்யழகன்’, ‘96’ ஆகிய இரு படங்களையும் இந்தியில் மறுபதிப்பு செய்யும் எண்ணமும் அவருக்கு உள்ளது. இது குறித்து சில தயாரிப்பு நிறுவனங்களுடன் அவர் பேசிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

