நடிகை சதாவின் வீட்டிலும் சோகம் நிறைந்துள்ளது.
விலைமதிப்பற்ற ஒருவரை தம் வாழ்க்கையில் இழந்துவிட்டதாக தனது சமூக வலைத்தளத்தில் அவர் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார். அதைக்கண்ட ஏராளமானோர் விவரமறிந்த பின்னர் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
சதாவின் தந்தை சையத் காலமானார். ஒரு வாரத்திற்கு முன்பு அவர் உயிரிழந்துவிட்ட நிலையில், சதா அத்தகவலை தாமதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
மேலும், தந்தையுடனான தனது பிணைப்பை நினைவுகூர்ந்து சதா இன்ஸ்டகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இடம்பெற்றுள்ள வார்த்தைகள் படிப்போரைக் கண்கலங்க வைக்கும் வகையில் உள்ளது.
“என் தந்தை இறந்து ஒரு வாரம் ஆகிறது. ஆனால் ஒரு சகாப்தம் கடந்துவிட்டதைபோல் உணர்கிறேன். என் தந்தையாக இருப்பதில் பெருமைப்படுவதாக அவர் எல்லோரிடமும் சொல்வார். ஆனால் இன்று, அவருடைய மகளாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.
“அவர் உண்மையிலேயே விலைமதிப்பற்ற மனிதர். மிஸ் யூ அப்பா,” என்று அப்பதிவில் தெரிவித்திருக்கிறார் சதா.
கடந்த 2002ஆம் ஆண்டு ‘ஜெயம்’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான சதா, விரைவில் முன்னணி நாயகியானார். ‘அந்நியன்’, ‘பிரியசகி’, ‘எதிரி’, ‘உன்னாலே உன்னாலே’ போன்ற படங்களில் நடித்தார்.
தற்போது திரைத்துறையில் இருந்து விலகி இருக்கும் சதா, ஒரு வனவிலங்கு புகைப்படக் கலைஞராக மாறிவிட்டார். அது தொடர்பான புகைப்படங்கள், காணொளிகளைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தப் புதுத்துறையிலும்கூட இவருக்கெனத் தனிக்கூட்டம் சேர்ந்துள்ளது. ஏராளமானோர் சதாவை சமூக ஊடகங்களில் பின்தொடர்கின்றனர்.