அப்பா, மகனுக்கு இடையேயான அழகான உறவைப் பேசும் படமாக உருவாகி உள்ளது ‘ஃபாதர்’.
பிரகாஷ்ராஜ் தந்தையாகவும் ‘டார்லிங்’ கிருஷ்ணா கதாநாயகனாகவும் நடித்துள்ளனர்.
ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மைசூரு, பெங்களூரு, குடகு உள்ளிட்ட இயற்கை கொஞ்சும் இடங்களில் நடந்துள்ளது.
‘கப்சா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆர்சி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.சத்துரு இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
படத்தில் மொத்தம் நான்கு பாடல்களாம். நகுல் அப்யங்கர் இசை அமைத்துள்ளார். அண்மையில் இப்படத்தின் ‘தீம் மியூசிக்’ ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
மிக விரைவில் முழு இசை வெளியீடு நடைபெறுமாம். அதையடுத்து முன்னோட்டம், குறு முன்னோட்டம் ஆகியவை வெளியாகும் என்கிறார் படத்தின் இயக்குநர் ராஜா மோகன். இவர் ஏற்கெனவே ‘குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தை இயக்கியவர்.
“இதுவரை பல்வேறு மொழிகளில் தாய்ப் பாசத்தைப் காட்சிப்படுத்தும் திரைப்படங்கள்தான் அதிக எண்ணிக்கையில் வெளியாகி உள்ளன.
“இந்தப் படம் அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட படைப்பாக இருக்கும். படம் பார்க்கும் பலரால் இந்த கதையுடன் தங்களைப் பொருத்திக்கொள்ள முடியும்.
தொடர்புடைய செய்திகள்
“ஒரு தந்தையின் தியாகத்தை, பெருமையைப் பேசும் படங்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. ஒரு அப்பாவின் பாசம், வலிகள் எதுவும், என்றுமே பதிவு செய்யப்படுவதில்லை. அந்தக் குறையை இந்தப் படம் போக்கும்,” என்கிறார் இயக்குநர் ராஜா மோகன்.
இது குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக்கூடிய வகையில் நல்ல படமாக உருவாகி உள்ளது.

