‘ஐ ஆம் கேம்’ திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில், நடிகர் துல்கர் சல்மான் தமது தந்தை மம்முட்டி குறித்துப் பெருமிதத்துடன் பேசியுள்ளார்.
திரையுலகில் வாரிசு நடிகராக அறிமுகமான துல்கர் சல்மான், மலையாளம் தவிர தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நடித்து ரசிகர்கள் மனங்களில் தனி இடம் பிடித்துள்ளார்.
குறிப்பாகத் தெலுங்குத் திரையுலகில் இவரது திரைப்படங்களுக்குத் தனி வரவேற்பு நிலவி வருகிறது.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இவர் நடித்துள்ள ‘ஐ ஆம் கேம்’ என்ற மலையாளத் திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்துள்ளது.
நிகழ்ச்சியில் துல்கர் பேசுகையில், “என் தந்தை என் வாழ்க்கையில் அளவுக்கு அதிகமாகத் தலையிடுவதில்லை,” என்று குறிப்பிட்டவர், “சூழ்நிலையை நீயே கையாண்டு வெற்றியைப் பெற வேண்டும் என்று எனக்கு முழுச் சுதந்திரம் வழங்கியுள்ளார்,” என்றார்.
இருப்பினும், ஏதேனும் தவறு நடந்தால் எனக்குப் பின்னால் ஒரு பாதுகாப்பு அரணாக இருக்கத் தயாராக இருப்பதாகத் தந்தை கூறியதாக அவர் தெரிவித்தார்.
“சர்க்கஸ் கயிற்றில் நடப்பவர்கள் கீழே விழுந்தால் காப்பாற்ற ஒரு பாதுகாப்பு வலை இருக்குமே, அதுபோலத்தான் என் தந்தையும் எனக்கு இருந்து வருகிறார்,” என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.


