நடிகர் அஜித்துக்கு கார் பந்தயத்தில் ஈடுபாடு என்றால், அவரது மகன் ஆதிக்குக்கு காற்பந்து விளையாட்டில் ஆர்வம் அதிகமாம்.
அஜித் துபாய், இத்தாலி என பல நாடுகளுக்குப் பறந்து கார் பந்தயத்தில் பங்கேற்று வரும் நிலையில், சென்னையில் நடைபெற்ற முக்கியமான காற்பந்து போட்டியைக் காண மகன் ஆதிக்கை அழைத்துச் சென்றுள்ளார் அஜித் மனைவி ஷாலினி.
இந்தியா ஆல் ஸ்டார்ஸ், பிரேசில் லெஜெண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்தப் போட்டியைக் காண சென்னையில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர்.
பிரேசில் அணியில் உலகப் புகழ்பெற்ற காற்பந்து வீரர்களான ரொனால்டினோ, ரிவால்டோ ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இப்போட்டியில் பிரேசில் அணி 2 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
போட்டியை மகனுடன் கண்டு ரசித்த ஷாலினி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இது அற்புதமான போட்டி என்றும் சிறந்த அனுபவத்தைத் தந்தது என்றும் குறிப்பிட்டார்.
மேலும், இந்தப் போட்டியை தனது மகன் ரசித்துப் பார்த்திருப்பார் என நம்புவதாகவும் கூறினார்.
ரொனால்டினோவின் தீவிர ரசிகராம் ஆதிக். போட்டி முடிந்த பிறகு அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
அப்போது எடுக்கப்பட்ட காணொளிப்பதிவை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அண்மையில், துபாயில் நடந்த கார் பந்தயத்தில், அஜித் தலைமையிலான அணி மூன்றாம் இடத்தைப் பிடித்தது.
அப்போது பேட்டியளித்த அவர், தனது குழந்தைகளையும் விளையாட்டுகளில் ஈடுபடச் சொல்லி ஊக்கப்படுத்துவதாகக் கூறியிருந்தார்.
ஷாலினி சிறந்த ‘பேட்மின்டன்’ வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வு நேரங்களில் பயிற்சியில் ஈடுபடுவார். வாய்ப்பு கிடைக்கும்போது சில போட்டிகளில் பங்கேற்று முத்திரை பதித்து வருகிறார்.