நகைச்சுவை வேடத்தில் நடிக்க பயம்: அன்னா பென்

நகைச்சுவை வேடத்தில் நடிக்க பயம்: அன்னா பென்

2 mins read
cd011b11-122d-4157-964c-a9b2bc1030f8
அன்னா பென். - படம்: ஃபில்மி பீட்
Google News Preferred Icon

மலையாளத் திரையுலகில் அறிமுகமாகி தமிழ் ரசிர்களிடமும் நல்ல பெயர் வாங்கியுள்ளார் நடிகை அன்னா பென்.

தமிழில் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. அதையடுத்து, ‘கான் சிட்டி’ படத்தில் நடித்துள்ளார் அன்னா பென்.

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘கான் சிட்டி’.

அர்ஜுன் தாஸ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ‘முத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் முதன்முறையாக நகைச்சுவை நடிப்பில் அசத்தியுள்ளாராம் அன்னா.

இதுவரை தீவிரமான, உணர்ச்சிவசப்படக்கூடிய கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்துப் பழகிய தமக்கு, இத்திரைப்படம் முற்றிலும் ஓர் புதிய அனுபவமாக அமைந்துள்ளது என்கிறார் அன்னா.

“எனக்கு நகைச்சுவைப் படங்களைப் பார்ப்பதற்கு மிகவும் பிடிக்கும் என்றாலும் அதில் நடிப்பது எப்போதும் பயத்தை ஏற்படுத்தும் ஒன்றாகவே இருந்தது. இதுவரை நான் நடித்த பெரும்பாலான படங்களுக்கு முன்கூட்டியே சில தயாரிப்புகள் தேவைப்பட்டன.

“ஆனால், ‘கான் சிட்டி’ படப்பிடிப்புத் தளத்திற்கு நான் எந்தவொரு தயாரிப்பும் இல்லாமல் ஒரு வெற்றுத்தாள் போலத்தான் சென்றேன்.

“இயக்குநர் ஹரிஷ் எல்லாவற்றையும் அங்கேயே பார்த்துக்கொள்ளலாம் என்று ஊக்கம் தந்தார்,” என்று அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் அன்னா.

யோகி பாபு, விடிவி கணேஷ், வடிவுக்கரசி போன்ற சிறந்த நடிகர்களுடன் இணைந்து நடித்தது சிறந்த அனுபவம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

படப்பிடிப்புத் தளத்தில் சிரிப்பைக் கட்டுப்படுத்த மிகவும் சிரமப்பட்டார்களாம்.

“இப்போதெல்லாம் இயக்குநர்கள் ‘இது ஒரு துணிச்சலான கதாபாத்திரம்’ என்று கூறும்போது எனக்குத் தயக்கமாக இருக்கிறது. ‘துணிச்சலான’ என்ற வார்த்தை இன்று அதன் உண்மையான அர்த்தம் புரியாமல் பயன்படுத்தப்படுகிறது.

“ஒரு பெண்ணின் உண்மையான வலிமை என்ன என்பதைப் புரிந்துகொள்ளாமல், சும்மா விளம்பரத்துக்காக அதைக் கதையில் திணிக்கக் கூடாது.

“இத்தகைய உணர்வுபூர்வமான கதைகளுக்கு ஆழமான ஆராய்ச்சியும் பெண் கோணத்திலான புரிதலும் மிகவும் அவசியம்,” என்று அந்நேர்காணலில் கூறியுள்ளார் அன்னா.

‘கொட்டுக்காளி’ திரைப்படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டாலும் வணிக ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ள அன்னா பென், அதற்காக தாம் பெரிதாக வருத்தப்படவில்லை என்கிறார்.

“’கொட்டுக்காளி’ படம் ஒரு பரிசோதனை முயற்சி என்பதை நாங்கள் அறிவோம். என் மனத்துக்குப் பிடித்தமான ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து, நல்ல திரைப்படத்தை எடுக்க விரும்பும் மனிதர்களுடன் இணைந்து பணியாற்றுவதே எனக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்.

“படத்தின் வசூல், மக்களின் வரவேற்பு என்பது அதற்குப் பின்னர் வரும் ஒரு கூடுதல் போனஸ் மட்டுமே,” என்று தெரிவித்துள்ளார் அன்னா பென்.

‘கான் சிட்டி’ திரைப்படம் தன் திரைப்பயணத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என நம்புவதாகவும் அன்னா பென் மேலும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்
நடிகைதிரைப்படம்இயக்குநர்