உணர்வுகள் நல்ல பாடங்களைக் கற்றுத்தரும்: ஜீவா

3 mins read
8ce83926-4d44-4ee8-b310-9f73292ec368
ஜீவா. - படம்: ஊடகம்
multi-img1 of 2

மீண்டும் தனித்துவம் வாய்ந்த கதைகளில் தாம் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புவதாகச் சொல்கிறார் நடிகர் ஜீவா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான சில படங்கள் வசூல் ரீதியில் வெற்றி பெறவில்லை.

“பொதுவாக நான் திகில் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வதில்லை. காரணம் அத்தகைய படங்களில் இடம்பெறும் சில முக்கியமான சம்பவங்களின் பின்னணி குறித்து விவரிக்கும் காட்சிகள் இடம்பெறாமல் போய்விடும். இதனால் ரசிகர்கள் குழப்பமடைவார்கள் என்பதுடன் மீண்டும் மீண்டும் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்து போகும்,” என்கிறார் ஜீவா.

எனினும், தற்போது இவரது நடிப்பில் உருவாகும் ‘பிளாக்’ என்ற ‘திகில்’ படத்தில் இத்தகைய குறைகள் ஏதும் இருக்காதாம். கொரோனா தொற்றுப்பரவல் காலத்தில் வீட்டில் முடங்கியபோது ஜெர்மன் திகில் படம் ஒன்றைப் பார்த்தாராம். அதே போன்றுதான் ‘பிளாக்’ படம் அருமையான திகில் படமாக உருவாகியுள்ளது என்கிறார்.

‘பிளாக்’ என்பது இரவை மட்டும் குறிக்காமல் மனிதர்களின் இருள் நிறைந்த மற்றொரு பக்கத்தையும் குறிக்கும் என்று விளக்கமளிக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.

“கடினமான காலகட்டங்களில்தான் நமது உள் உணர்வுகளை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அந்த உணர்வுகள் நல்லவையோ கெட்டவையோ, நமக்கு நல்ல பாடங்களைக் கற்றுத்தரும்.

“அத்தகைய கருத்தை வலியுறுத்தும் படமாக இது உருவாகியுள்ளது. படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்புக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு திகில் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

“கதையோட்டம் இப்படித்தான் இருக்குமென்று அனைவரும் ஒரு முடிவுக்கு வரும்போது, இடைவேளையில் திடீரென கதைப்போக்கு மாறும். இதுபோல் பல சுவாரசியங்கள் உள்ளன.

“முன்னோட்டக் காட்சித்தொகுப்பில் இடம்பெற்ற மர்மங்களுக்கு படத்தை முழுமையாகப் பார்க்கும்போது விடை கிடைக்கும்,” என்கிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.

இப்படத்துக்கு ‘குழப்பம்’ என்றுகூட தலைப்பு வைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும் என நடிகர் ஜீவா சிரித்தபடி சொல்கிறார். ஏனெனில் இப்படத்தின் இறுதிக்காட்சியைப் பலவிதமாக மாற்றி மீண்டும் மீண்டும் படமாக்கினார்களாம்.

“2013ஆம் ஆண்டில் வெளியான ‘என்றென்றும் புன்னகை’ படத்தின் இறுதிக்காட்சியை நான்கு விதமாகப் படமாக்கினோம். படத்தில் எது இடம்பெறும் என்பது எங்களுக்கே தெரியாத நிலை இருந்தது. அடுத்து ‘சிவா மனசுல சக்தி’ (2009) படத்துக்கு மூன்று விதமான இறுதிக்காட்சிகள் இருந்தன.

“2008ஆம் ஆண்டு வெளியான ‘தெனாவட்டு’ படம் இறுதிக்காட்சியுடன்தான் தொடங்கும். அன்றைய தேதிக்கு அது தனித்துவமான முயற்சியாக கருதப்பட்டு ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. அதே போல் ‘பிளாக்’ படம் எங்கு தொடங்கும், எங்கு முடிவடையும் என்பது குறித்து எங்களுக்கு எந்தவிதமான தெளிவும் இன்னும் ஏற்படவில்லை,” என்கிறார் ஜீவா.

ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் பட நாயகி பிரியா பவானி சங்கர் உள்பட அனைவருமே மிகுந்த ஈடுபாட்டுடன் நடித்ததாகச் சொல்கிறார்.

கதைப்படி, இதில் ஜீவாவுக்கு தகவல் தொழில்நுட்ப வல்லுநர் கதாபாத்திரமாம். இவரும் பிரியாவும் சென்னையில் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நிலத்தைப் பார்க்கச் செல்கிறார்கள். அப்போது ஏற்படும் திகிலான சம்பவங்கள்தான் இப்படத்தின் கதையாம்.

“தொடக்கத்தில் நான் நடித்த படங்களைப் பார்த்த அனைவருமே நான் மாறுபட்ட கதைக்களங்களில் நடிப்பதாகக் கூறுவர். பிறகு வணிகப்படங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வந்தேன். இப்போது ரசிகர்கள் மீண்டும் தனித்துவமான கதைகளில் நடிக்குமாறு அறிவுறுத்துகிறார்கள்,” என்கிறார் ஜீவா.

குறிப்புச் சொற்கள்