தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

என்னை அடக்கும் ஆயுதமாக மாறிய இசை: அஞ்சனா

2 mins read
9979473f-2b6b-463e-8cfd-de313e54522c
அஞ்சனா ராஜகோபாலன். - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகில் பெண் இசையமைப்பாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

இந்நிலையில், தனக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு களமிறங்கி உள்ளார் பாடகியும் இசையமைப்பாளருமான அஞ்சனா ராஜகோபாலன்.

அண்மையில் வெளியான ‘மாயக்கூத்து’ படத்துக்கு இவர்தான் இசை.

‘ஆபரா’ என்ற ஒருவகை மேற்கத்திய இசையில் புலமை பெற்றவராம் அஞ்சனா. இயக்குநர் மிஷ்கினுக்கு இசைப் பயிற்சி அளித்தவர் என்ற வகையிலும் அறியப்படுகிறார்.

‘மாயக்கூத்து’ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு, தமக்கு மிகுந்த உற்சாகம் அளித்திருப்பதாகச் சொல்லும் அஞ்சனாவுக்கு, சிறு வயதில் இருந்தே இசையில் ஆர்வம் அதிகமாம்.

“நான் மிகவும் குறும்புக்காரப் பெண். சிறு வயதில் ஓரிடத்தில் உட்காராமல் இங்கும் அங்குமாக ஓடிக்கொண்டே இருப்பேன்.

“இளையராஜாவின் ‘அஞ்சலி’ பட ஒலிநாடாவை ஓடவிட்டால், அதன் இரண்டு பக்கமும் ஓடி முடியும் வரை உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவே மாட்டேன் என்று வீட்டில் எல்லாரும் சொல்வார்கள்.

“என்னை அடக்கி வைக்க அம்மாவுக்கு இசை ஓர் ஆயுதமாக அமைந்தது எனலாம். அந்த அளவுக்கு இசை மீது எனக்கு ஈர்ப்பு இருந்தது. அப்படித்தான் இசை என்னைத் தேடி வந்தது. நானும் அதைத் தேடிச் சென்றேன்.

“பாடகியாகத்தான் என் இசைப் பயணம் தொடங்கியது. பட்டப்படிப்பு முடித்து வேலைக்குச் சென்றாலும், இசைதான் என் வாழ்க்கை என முடிவு செய்தேன். கர்நாடக இசையை முறைப்படி கற்றுக்கொண்டேன். யாரிடமும் பயிற்சி பெறாமலேயே கிட்டார் இசைக்கத் தொடங்கினேன்.

“அகஸ்டின் பால் மாஸ்டர்தான் எனக்கு ‘ஆபரா’ இசையைக் கற்றுக்கொடுத்தார். லண்டனில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் வாய்ப்பாட்டில் டிப்ளோமா படிப்பை முடித்ததுதான் நான் கற்றுக்கொண்ட இசைக்கல்வி.

“மற்றபடி, என்னைச் சுற்றியுள்ள இசையமைப்பாளர்களிடம் கற்றுக்கொண்ட அனுபவத்தைச் சேமித்து வைத்திருக்கிறேன். அதுதான் எனக்கு வழிகாட்டுகிறது.

“மேலும், ஜெர்மனி, சீனா போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு, அவர்களுடைய இசையைப் படித்து, நம்முடைய இசையை அங்கே பகிர்ந்து எனப் பல தரப்பில் இருந்தும் இசையைக் கற்றுக்கொள்ள முடிந்தது,” என்று சொல்லும் அஞ்சனா, ஏ.ஆர்.ரகுமான், விஷால் சந்திரசேகர், பாலிவுட் அமித் திரிவேதி எனப் பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றி உள்ளார்.

அடுத்து, பாலிவுட் இயக்குநர் ஷாத் அலி இயக்கும் படத்துக்கு இசையமைக்கிறார்.

குறிப்புச் சொற்கள்