அதிக பொருட்செலவில் உருவாகும் படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்கள் இருப்பதில்லை என ஆதங்கப்படுகிறார் நடிகை ரெஜினா கஸாண்ட்ரா.
பல பெரிய படங்களில் பெண் கதாபாத்திரங்கள் மிக மோசமாக எழுதப்பட்ட விதத்தால், தாம் மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாகவும் ஒரு நேர்காணலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அண்மையில் வெளியான ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்துடனும் இயக்குநர் மகிழ் திருமேனியுடன் பணிபுரிந்ததில் எனக்கு உத்வேகம் கிடைத்திருக்கிறது. அந்தப் படத்தில் நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் என்னைத் தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என இயக்குநர் நம்பிக்கை அளித்தார்.
“ஒரு சிக்கலான கதாபாத்திரத்தை என்னால் நியாயப்படுத்த முடியும் என நம்பியதற்காக இயக்குநருக்கு நன்றி.
“ஒரு படத்தின் பெண் கதாபாத்திரம் எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்பதை கவனித்தாலே, அதன் மொத்த கதையையும் அதன் வலிமையையும் உணரலாம்.
“அதனால்தான் நான் என் இயக்குநர்களை நம்புகிறேன். ஆனாலும் சில இயக்குநர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள். அதனால்தான் என்னிடம் சொல்லப்படும் ஒவ்வொரு கதையிலும், ஒரு தனித்துவத்தை உணர்ந்தால்தான் அதில் நடிக்கவே ஒப்புக்கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார் ரெஜினா.
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் குமார், திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘விடாமுயற்சி’.
மேலும், அர்ஜுன், ரெஜினா, ஆரவ், நிகில் நாயர், தசரதி, கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இதில், ரெஜினாவுக்கு முக்கியமான கதாபாத்திரம் அமைந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இப்படம் வெளியாகும் முன்பு முழுமையாகப் பார்த்த நடிகர் அஜித், ரெஜினாவின் நடிப்பு அருமை எனப் பாராட்டி உள்ளார்.
இப்படம் வெளியானால் ரெஜினாவுக்கு அதிக பலன் கிடைக்கும் என்றும் கூறியிருந்தார்.

