‘பராசக்தி’ முன்னோட்டத்தில் அனல் பறக்கும் வசனங்கள்

2 mins read
3c9122aa-b7b3-4e66-a8f0-94dc2630fb04
1960களின் பின்னணி, ஆடை அலங்காரம் எனப் படக்குழுவின் உழைப்பு முன்னோட்டத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. - படம்: டான் பிக்சர்ஸ் 

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ படத்தின் முன்னோட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 4) இரவு வெளியானது.

சுதா கொங்கரா இயக்கிய ‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா, பசில் ஜோசப் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர்.

டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி கே.சந்திரன், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ஜனவரி 10ஆம் தேதி ‘பராசக்தி’ வெளியாகவுள்ள நிலையில் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இந்தித் திணிப்புக்கு எதிராக நடந்த நடவடிக்கையைக் கதைக்களத்துடன் சொல்லும் படம் ‘பராசக்தி’ என்பது ஏற்கெனவே தெரிந்ததுதான் என்றாலும், முன்னோட்டத்தின் மூலம் படத்தின் வீரியத்தை உணர முடிகிறது.

1960களின் பின்னணி, ஆடை அலங்காரம் எனப் படக்குழுவின் உழைப்பு முன்னோட்டத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.

மூன்று நிமிடம் முன்னோட்டம் முதலில் மெதுவாகத் தொடங்கி பின்பு பரபரப்பைக் கூட்டுகிறது.

இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்கள், பேரறிஞர் அண்ணா வரும் காட்சி, தீப்பொறி போன்ற வசனங்கள், அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் எனப் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டுகிறது முன்னோட்டம்.

“தமிழர்கள் இந்தித் திணிப்புக்குத்தான் எதிரானவர்கள், இந்தி பேசும் மக்களுக்கு அல்ல”, “டெல்லி மட்டும்தான் இந்தியாவா?,” என்பன போன்ற வசனங்கள் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

சுயமரியாதையை இழக்காதீர்கள்

இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரவி மோகன் பேசினார்.

“பராசக்தி சுயமரியாதையைக் காப்பாற்றும் படம். நானும் என்னுடைய சுயமரியாதையைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறேன். முதுகில் அடிப்பவர்களைப் பற்றி எனக்குக் கவலை கிடையாது.

“கண்ணுக்குத் தெரிபவர்களை பற்றித்தான் கவலை. அனைவருக்கும் ஓர் அண்ணனாகச் சொல்கிறேன், சுயமரியாதையை மட்டும் யாரும் இழக்காதீர்கள்,” என்று அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்