நடனத்தைவிட சண்டையிடுவது சவாலாக இருந்தது: பிரியா வாரியர்

2 mins read
538052eb-588b-4266-9bd7-408a5e3f570b
பிரியா வாரியர். - படம்: இன்ஸ்டகிராம்

அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் அப்படத்தில் வரும் பழைய பாடல்களுக்கு இடையில் நடக்கும் சண்டையும் நடனக் காட்சிகளும் படத்தின் முக்கிய அம்சம் என்றே சொல்லலாம்.

அப்படி வரும் ஒரு பாடலுக்கு நடனமாடி மீண்டும் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்து இருக்கிறார் பிரியா வாரியர். அது அவருக்குப் புதிதல்ல. கடந்த 2018ஆம் ஆண்டு ‘ஒரு அடார் லவ்’ எனும் மலையாளப் படத்தில் ஒரு கண் சிமிட்டல் காட்சியின் மூலம் பல இளையர்களின் மனத்தைக் கொள்ளைக்கொண்டவர் அவர்.

தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தில் வரும் ‘தொட்டு தொட்டு சுல்தானா’ எனும் பழைய பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்களின் மனத்தில் இன்னும் ஆழமாக இடம்பிடித்திருக்கிறார் பிரியா வாரியர்.

அண்மையில் விகடனுக்கு அவர் நேர்காணல் அளித்திருந்தார். அதிலிருந்து சில தகவல்களை நாம் இதில் காணலாம்.

“மக்களுடைய வரவேற்பு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு ரசிகர்கள் என்னை மீண்டும் அடையாளம் காணுகிறார்கள். திரையரங்கில் என்னுடைய காட்சிகள் வரும்போது மக்கள் கொண்டாடுகின்றனர். முக்கியமாக, தமிழ்த் திரையுலகில் இப்படியொரு அடையாளம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி,” எனப் புன்சிரிப்புடன் கூறினார் பிரியா.

“நான் சிம்ரன் நடனம் ஆடிய அதே பாடலுக்கு அப்படத்தில் நடனம் ஆடினேன். சிம்ரன் ஒரு நடனத் தாரகை. அவர் ஆடிய பாடலுக்கு நடனம் ஆட முடியுமா என எண்ணாமல் என்னால் முடிந்தளவு அவரைப் போன்றே ஆட முயற்சித்தேன்,” என அவர் கூறினார்.

“ஒருவரின் நடனத்தை மற்றொருவருடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. சிம்ரன் என்னைவிட அனுபவம் வாய்ந்தவர். அவர் ஆடிய பாடலுக்கு நடனமாடி அவருக்கு அதைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணமாக இருந்தது,” என அவர் தெரிவித்தார்.

படம் வெளியான பிறகு அந்த நடனக் காட்சிக்குத் தொடர்பான சிலவற்றை இன்ஸ்டகிராமில் தான் பகிர்ந்ததாகவும் அப்பதிவை சிம்ரன் கண்டு அவருக்கு வாழ்த்துகள் சொன்னதாகவும் பிரியா சொன்னார்.

மேலும், காத்திருந்தால் சரியான நேரத்தில் சரியான வாய்ப்புகள் நம் கைகூடி வரும் என்பதை நான் நம்புகிறேன் என அப்படத்தில் தனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தான் சரியாகப் பயன்படுத்திக்கொண்டதாகக் கூறினார் அவர்.

“அப்படத்தில் எனக்கு மிகுந்த சவாலாக இருந்தது சண்டைக் காட்சிகள் தான். நான் முதலில் அச்சமடைந்தேன். இயக்குநர் எனக்கு நம்பிக்கை ஊட்டினார்,” எனச் சொன்ன பிரியா, அர்ஜூன் தாசுடன் இணைந்து நடித்தைப் பற்றியும் சிலவற்றைப் பகிர்ந்தார்.

“அவர் இரட்டை வேடத்தில் நடித்ததால் மிகுந்த பரபரப்பாக இருப்பார். இருப்பினும், இடையில் என்னை சிரிக்க வைக்க ஏதாவது ஒன்றை செய்துகொண்டே இருப்பார்,” என புன்முறுவலுடன் கூறியவர், அஜித் பற்றியும் பேசினார்.

“அஜித்திடம் தான் ஒரு முன்னணி நடிகர் என்ற எண்ணமே இருக்காது. எல்லோரையும் சமமாக நடத்துவார்,” என்றார் பிரியா வாரியர்.

குறிப்புச் சொற்கள்