ஒருவரைச் சட்டவிரோதமாக தடுத்து வைப்பது குறித்து விவரித்து, விவாதிக்கும் படமாக உருவாகியுள்ளது ‘மனுஷி’. கோபி நயினார் இயக்கத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடித்துள்ள படம் இது.
காவல்துறையின் விசாரணைக்கு உட்படுகிற பெண்ணாக நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா.
ஆண்ட்ரியா இந்தப் படத்தின் முழுத் தன்மையையும் அரசியலையும் முழுமையாகப் புரிந்துகொண்டார் என்றும் கதையின் உண்மைத்தன்மையை உணர்ந்ததுமே அதில் நடிப்பதற்குத் தயாராகிவிட்டார் என்றும் பாராட்டுகிறார் கோபி நயினார்.
“இவ்வாறு தயாராவதுதான் ஆண்ட்ரியாவிடம் உள்ள சிறப்பம்சம். ஒரு கதாபாத்திரத்தில் வந்து உட்காரும்போது அவருக்கென்று ஒரு பாணி இருக்கிறது.
“இப்படத்தில் உள்ள பல உரையாடல்கள் மனத்தைத் தைப்பதுபோல் இருக்கும். அதையும் கடந்து ஆண்ட்ரியா வெளிப்படுத்தும் நடிப்புதான் ரசிகர்கள் மனதில் நிற்கும். விசாரணை அதிகாரியாக நாசர் நடித்திருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்திற்குக் கொடுத்த உயிர், அவருக்கே உரித்தானது. யாராலும் நகல் எடுக்க முடியாது.
“மலையாள நடிகர் ஹக்கீம், டைரக்டர் தமிழ், பாலாஜி சக்திவேல் என நடிப்பின் கூறு தெரிந்தவர்கள் நடித்திருக்கிறார்கள்,” என்கிறார் கோபி நயினார்.
இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார் இளையராஜா.
முழுப் படத்தையும் பார்த்த பிறகு வெகுவாகப் பாராட்டிய அவர், ‘இந்தப் படத்திற்குப் பாடல்களே தேவையில்லை’ என்றாராம்.
தொடர்புடைய செய்திகள்
பிறகு, இசை தேவைப்படுமா என்று கோபி நயினாரிடம் அவர் கேட்க, ‘பல இடங்களை உங்கள் இசைதான் மேலெழச் செய்ய முடியும்’ என்று பதிலளித்தாராம் இயக்குநர் கோபி.
அதை ஒப்புக்கொண்ட இளையராஜா, அவ்விதம் திரையிசையில் மாயம் செய்திருப்பதாக படக்குழு வியந்து பாராட்டுகிறது.
“அவர் பெரிய காட்டாற்று வெள்ளம். இரண்டு பக்கமும் கரைகளை உண்டாக்கிப் போய்க்கொண்டே இருக்கிறார். அந்தக் கரைகள் வரலாற்றில் பதிவாகும். நான் இரண்டு கைகளால் மட்டுமே அள்ளிப் பருகினேன். அவ்வளவுதான் என்னால் முடிந்தது.
“எனது ஆரம்பப்படமாக ‘முதல் மணியோசை’ என்ற கதையை உருவாக்கி அதில் குஷ்புவைக் கதாநாயகியாகவும் மறைந்த சொக்கலிங்க பாகவதரை வயதான ஜமீன் கதாநாயகனாகவும் போட்டு, அதற்காக அவரிடம் இசையமைக்கக் கேட்டு வந்ததைச் சொன்னேன். அதை அவர் ஞாபகம் வைத்துப் பேசியது ஆச்சரியமாக இருந்தது,” என்று வியப்பு குறையாமல் அண்மைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் கோபி நயினார்.
படம் முழுக்கவும் விசாரணைக் காட்சிகள் மட்டுமே இருக்குமாம். அதை வித்தியாசமாகவும் தனித்தும் படம் பிடிப்பது மிகப்பெரிய வேலை. அந்தப் பணியை ஒளிப்பதிவாளர் எட்வின் மிகுந்த அக்கறையுடன் மேற்கொண்டதாகவும் படக்குழு பாராட்டுகிறது.
இப்படத்தின் தயாரிப்பாளர் இயக்குநர் வெற்றிமாறன் என்பது மற்றொரு சிறப்பம்சம்.
கதையைச் சொன்னதும் அவருக்குப் பிடித்துப் போனதாம். கதை கேட்ட சில நாள்களிலேயே இயக்குநரைத் தொடர்புகொண்டு ‘மனுஷி’ படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்றாராம்.
“அவருக்குப் படம் மிகவும் பிடித்திருக்கிறது. இந்தப் படம் நிறைய கேள்விகளை எழுப்பும் என்றார். தணிக்கைக்குக் கொண்டு போகும்போது அவர்கள் பல காட்சிகளுக்கு ஆட்சேபனை சொல்கிறார்கள். அவர்கள் சொல்கிற குற்றச்செயல்கள் எதுவும் படத்தில் இல்லை. பல உரையாடல்களை ‘ஏன் இப்படி வைக்கிறீர்கள்’ எனக் கேள்வி கேட்கிறார்கள். அப்படி ஒரு உரையாடலை அனுமதிக்க முடியாததுதான் அவர்கள் ஜனநாயகமாக இருக்கிறது.
“நீதிமன்றத்திற்குப் போயிருக்கிறேன். விடிவு வரும்,” என்று நம்பிக்கையுடன் பேசுகிறார் இயக்குநர் கோபி நயினார்.

