திரிஷாவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘தக் லைஃப்’ படக்குழுவினர் சுவரொட்டி, பாடல் காட்சி வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.
வயது 42 ஆனாலும், திரையுலகில் 22 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார் திரிஷா.
நடிகர்கள்தான் வயதானாலும் நாயகர்களாக நடிப்பார்கள். நடிகைகளுக்கு வயதானாலோ, திருமணமானாலோ வாய்ப்புத் தர மறுப்பது பல ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. ஆனால், இந்நிலை தற்பொழுது மாறியுள்ளது.
திருமணமானாலும் குழந்தை பெற்றாலும் வயது அதிகரித்து வந்தாலும் நடிகைகளும் கதாநாயகியாகவே தொடர்ந்து நடித்து வருகிறார்கள். அப்படிப்பட்ட தமிழ் நடிகைகளில் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. மே நான்காம் தேதி அவருக்கு 42 வயது நிறைவடைந்து 43வது வயது தொடங்கியது.
போட்டி நிறைந்த, ஆணாதிக்கம் நிறைந்த சினிமா உலகில் இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடித்து நிற்பதே தனி சாதனைதான்.
திரிஷாவின் பிறந்தநாள் முன்னிட்டு திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ‘தக் லைஃப்’ படக்குழுவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ‘ஜிங்குச்சா’ பாடலையும், புது சுவரொட்டி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.
திரிஷா, தமிழில் ‘தக் லைஃப், சூர்யா 45’, தெலுங்கில் ‘விஷ்வம்பரா’, மலையாளத்தில் ‘ராம்’ என மூன்று மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இதற்கிடையில் வலைத்தளங்களில் திரிஷாவுடன் அதிகமாக ஜோடி சேர்ந்து நடித்த நடிகர் யார் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யுடன்தான் திரிஷா அதிகமாக இணைந்து நடித்திருக்கிறார் என்று பதிலும் வெளியாகி உள்ளது.
திரையுலகில் இவர்களது காதல் காட்சிகள், பாடல் காட்சிகள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளன. அந்தப் படங்கள் திரையரங்குகளில் வெற்றியைத் தந்ததோடு, இந்த ஜோடி ரசிகர்களின் மனதில் நிலையான பிரியமான இடத்தைப் பெற்றது.
‘கில்லி’ படம் மூலம் இவர்கள் ஜோடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. அதிலிருந்து தொடங்கி, ‘திருப்பாச்சி’, ‘ஆதி’, ‘குருவி’ என தொடர்ந்து நடித்தனர்.
படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்றன.
இந்த அனைத்து படங்களும் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் மறக்க முடியாத தருணங்களாக அமைந்தன.
குறிப்பாக ‘கில்லி’ படத்தில் அவர்களுடைய கெமிஸ்ட்ரி, பாடல்கள், மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தன.
அதன் பின் ‘திருப்பாச்சி’ மற்றும் ‘ஆதி’ படங்களிலும் அவர்களது இணைப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இவர்களின் வெற்றிக் கூட்டணி இருந்தது வந்தது.
இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான ‘லியோ’ படத்தில் மீண்டும் விஜய், திரிஷா இணைப்பு திரும்ப வந்தது, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த ஜோடி மீண்டும் இணைந்து நடிப்பார்களா என்ற ஆர்வம் தற்போது கோலிவுட்டில் அதிகரித்து வருகிறது. ஆனால் இனி படங்களில் நடிக்கமாட்டேன் என்று அதற்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
மொத்தமாக, விஜய்யுடன் அதிகப்படியாக ஜோடி சேர்ந்த திரிஷா தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

