விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரைச் சிறப்பிக்கும் விதத்தில் காணொளி ஒன்றை படக்குழு வெளியிட இருக்கிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்தப் படம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இன்னும் ஒரு சில நாள்களில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடியவுள்ளது. ஏற்கெனவே விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன.
அதனைத்தொடர்ந்து மற்ற நடிகர்கள் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் மட்டும்தான் படமாக்கப்பட இருக்கிறதாம். அதுவும் இன்னும் சில நாள்களில் முடிந்துவிடும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி டியோல் நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து முக்கிய கதாபாத்திரங்களில் நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி வரவிருக்கின்றது.
அன்றைய தினம் அவர் நடித்துக்கொண்டிருக்கும் படங்களின் அறிவிப்புகள் வருவது வழக்கமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் விஜய்யின் பிறந்தநாளில் அவர் அப்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்களின் ‘கிலிம்ப்ஸ்’ அல்லது சுவரொட்டி வெளியாகும்.
அந்த வகையில் இந்த ஆண்டு விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ‘கிலிம்ப்ஸ்’ காணொளியை வெளியிட இருக்கிறது படக்குழு.
அந்தக் காணொளி படத்தின் முன்னோட்டக் காட்சியா அல்லது வேறுவிதமாக இருக்குமா என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
ஏற்கெனவே விஜய் நடித்த ‘தி கோட்’ படத்தின் காணொளியும் இதுபோல் விஜய்யின் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் விஜய்யின் இறுதிப் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி உலகளவில் வெளியாக உள்ளது. ‘ஜனநாயகன்’ படத்திற்குப் பிறகு முழுநேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ளார்.