இயக்குநர் பா.ரஞ்சித் திரைப் படங்களை இயக்குவதுடன், நல்ல படைப்புகளைத் தயாரித்தும் வருகிறார். அந்த வரிசையில், அவர் தயாரித்துள்ள ‘தண்டகாரண்யம்’ படம் விரைவில் திரைகாண்கிறது.
இதை ‘இரண்டாம் உலகப் போரின் கடைசிக்குண்டு’ படத்தின் இயக்குநரான அதியன் ஆதிரை இயக்கி உள்ளார்.
‘அட்டக்கத்தி’ தினேஷ், கலையரசன், ரித்விகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது எளிய மனிதர்களின் வாழ்க்கையைச் சொல்லும் படைப்பாம்.
“தண்டகாரண்யம்’ என்பதற்கு நிறைய அர்த்தங்கள் உள்ளன. இதிகாசத்தில் ராவணன் சீதையை தூக்கிச்சென்ற வனத்துக்கு ‘தண்டகாரண்யம்’ என்று பெயர். குற்றவாளிகள் வாழும் இடத்தை ‘தண்டகாரண்யம்’ எனக் குறிப்பிடுவார்கள். தண்டம் என்றால் குற்றம், ஆரண்யம் என்றால் காடு. தண்டத்துக்கு வில் என்ற அர்த்தமும் உள்ளது,” என்று படத்தலைப்புக்கான நீண்ட விளக்கத்தை அளிக்கிறார் அதியன் ஆதிரை.
அவர் குறிப்பிடும் காடு தெற்காசியாவின் அடர்ந்த காடுகளில் ஒன்றாம். இந்தக் காடு ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா எனப் பல மாநிலங்களையும் உள்ளடக்கியது. இதில் முறைசாரா தொழிலாளர்களின் வாழ்க்கையைப் படமாக்கி உள்ளாராம்.
“இத்தகைய தொழிலாளிகள் லட்சக்கணக்கில் உள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், தொழிலாளர்கள் எனப் பல துறைகளிலும் பல ஆண்டுகளாக அரசுப் பணியில் இருந்தாலும் பணி நிரந்தரம் இருக்காது.
“காடுகளைக் கண்காணிக்கும் வேட்டைத் தடுப்பு காவலர்களும் இதில் அடங்குவர். தமிழ்நாட்டில் பெரும்பாலும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இந்தப் பணியில் உள்ளனர்.
“நாள்தோறும் காட்டுப்பகுதிகளில் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கண்காணிக்கவேண்டும். ஒவ்வொரு வனத்துறை அதிகாரியின் அதிகாரத்தின்கீழ் 20 அல்லது 30 பேர் வேலையில் இருப்பார்கள். பணி நிரந்தரம் இல்லாத சூழலில் இந்தத் தொழிலாளர்கள் வீட்டுக்கும் போகமுடியாது.
தொடர்புடைய செய்திகள்
“காடு, வீடு வெவ்வேறு இடங்களாக இருப்பதால் வெளி உலகத்துடன் தொடர்பு இருக்காது. திடீரென வேலையை விட்டு அனுப்பிவிடுவார்கள். அவருடைய குடும்பங்கள் சொல்லமுடியாத துயரங்களை அனுபவித்துள்ளன.
“அவ்வாறு விரட்டியடிக்கப்பட்ட ஒருவன், வட இந்தியாவுக்கு வேலை தேடிச் செல்கிறான். அதன்பின் அவன் வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது என்பதைத்தான் இந்தப் படம் விளக்கும்,” என்கிறார் இயக்குநர் அதியன் ஆதிரை.
கதை தயாரானதும் தாம் பல கதாநாயகர்களை அணுகியதாகவும் எனினும் கதை பேசும் அரசியல் காரணமாக பலர் நடிக்க மறுத்துவிட்டனர் என்றும் கூறுகிறார் அவர்.
“கலையரசன் என் தம்பி போன்றவர். அதற்காக அவர் இப்படத்தில் நடிக்கவில்லை. கதைக்கு தேவையானவர்களை மட்டுமே நான் ஒப்பந்தம் செய்கிறேன்.
“அதேபோல் தினேஷ் எனக்குப் பிடித்த நடிகர். தாம் ஏற்கும் கதாபாத்திரத்துக்காக நேர்மையாக உழைப்பவர். ‘சடையன்’ என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார்.
“தினேஷும் கலையரசனும் போட்டிபோட்டு நடித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட காட்சியைப் படமாக்கியபோது 300 பேர் வேடிக்கை பார்த்தனர். அவர்கள் அனைவருக்கும் கன்னட மொழி மட்டும்தான் தெரியும்.
“காட்சி படமாக்கப்பட்டதும் அந்த 300 பேரும் அழத் தொடங்கிவிட்டனர். அவர்களைப் பார்த்து படக்குழுவினரும் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதனர்.
“என் கதை நாயகர்களின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்,” என்கிறார் அதியன் ஆதிரை.