இயக்குநர் பார்த்திபனிடம் ஒரு துணை இயக்குநராகப் பணியாற்றியவர் வெங்கட் ஜனா. இவர் தற்போது ‘இறுதி முயற்சி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக உயர்ந்துள்ளார்.
‘காஃபி டே’ போன்ற உயர் ரக உணவகம் முதல் சாதாரண தேநீர்க் கடை நடத்துபவர்கள் வரை, பலரும் ஏதோ ஒரு காரணம், மன அழுத்தத்தால் ஒரு முறையாவது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்திருப்பார்கள். அல்லது குறைந்தபட்சம், அது குறித்து யோசித்தாவது பார்த்திருப்பார்கள்.
“எந்தப் பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக்கொள்வது தீர்வல்ல என்ற கருத்தை இப்படம் வலியுறுத்தும். ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறேன்.
“சமுதாயத்தில் இருக்கும் ஒரு பிரச்சினையைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறான் கதாநாயகன். இறுதியாக அவர் மேற்கொள்ளும் முயற்சிக்கு பலன் கிடைத்ததா என்பதுதான் இப்படத்தின் கதைச்சுருக்கம்,” என்கிறார் வெங்கட் ஜனா.
இப்படத்தில் நடிகர் ரஞ்சித் நாயகனாக நடித்துள்ளார். அவரைத் தமிழ் சினிமா இன்னும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றும் இந்தப் படத்தில் பிரமாதமாக நடித்துள்ளார் என்றும் பாராட்டுகிறார் இயக்குநர்.
நாயகியாக நடித்துள்ள மெகாலி மீனாட்சி வங்காள நடிகையாம். கதைப்படி, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடிக்க வேண்டும் என்றவுடன், பல நடிகைகள் பின்வாங்கிவிட்ட நிலையில், எந்தவித தயக்கமும் இன்றி இவர் நடிக்க முன்வந்துள்ளதாகச் சொல்கிறார் வெங்கட் ஜனா.

