ஏலகிரிப் பகுதியைச் சேர்ந்த மலை மக்களின் வாழ்வியலைப் பேசும் படம்

ஏலகிரிப் பகுதியைச் சேர்ந்த மலை மக்களின் வாழ்வியலைப் பேசும் படம்

படம்: தினமலர்

17 Jul 2026 - 3:52 pm

2 mins read

தமிழகத்தில் உள்ள ஏலகிரிப் பகுதியைச் சேர்ந்த மலை மக்களின் வாழ்வியலைப் பேசும் படமாக உருவாகியுள்ளது ஒரு புதிய திரைப்படம்.

இதை இயக்குநர் தாஜின் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு ‘போங்கு’ என்ற படத்தை இயக்கியவர்.

‘மலைகளின் இளவரசி’ என்றழைக்கப்படும் ஏலகிரியில் வசிக்கும் மலை மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களையும் அவர்களின் தற்போதைய சமூக நிலையையும் மையமாகக் கொண்டு இதுவரை எந்தப் படமும் வெளியாகவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார் இயக்குநர் தாஜின். இப்படத்தைத் தமிழ்வாணன் தயாரிக்கிறார்.

“ஏலகிரி மலையில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வியல் முறையையும் அதிகார வர்க்கத்தால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளையும் உண்மைத்தன்மை மாறாமல் அப்படியே திரையில் கொண்டு வருவதே எங்களது நோக்கம்.

“குறிப்பாக, அந்த மக்களின் அன்றாட வாழ்வில் பொதுவுடைமைக் கொள்கையின் தாக்கம் எந்த அளவிற்குப் பிரதிபலிக்கிறது என்பதை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்துள்ளோம்.

“கல்வி, விளையாட்டுத் துறைகளில் ஏலகிரி மலை இளையர்களிடம் கொட்டிக்கிடக்கும் திறமைகளை இத்திரைப்படம் வெளிச்சமிட்டுக் காட்டவுள்ளது.

“இத்தனை திறமைகள் இருந்தும் அதிகார அமைப்புகளால் அவர்களுக்கான அடையாளமும் அங்கீகாரமும் எவ்வாறு திட்டமிட்டு மறுக்கப்படுகிறது என்பதையும் தடைகளைத் தாண்டி அவர்கள் சாதித்த பின்னரும் அவர்களின் வாழ்வாதாரத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படாத அவலத்தையும் இக்கதை விவாதிக்கிறது,” என்று இயக்குநர் தாஜின் கூறினார்.

கதை பிடித்துப் போனதால் தயாரிப்பாளர் தமிழ்வாணனே இப்படத்தின் நாயகனாக அறிமுகமாகிறார்.

அவருக்கு ஜோடியாக அபிராமி நடிக்க, கௌசல்யா, விஜயலட்சுமி, அகத்தியன் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

பட வெளீயிடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும்.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று பெருமிதம் கொள்ளும் இந்திய நாட்டின் ஏதோ ஒரு மூலையில் மறைந்திருக்கும் ஒடுக்குமுறைகளை, எவ்வித ஒளிவு மறைவுமின்றி வெள்ளித்திரையில் பிரதிபலிப்பதே நோக்கம் என இப்படக்குழுவினர் கூறி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
நடிகர்இயக்குநர்தயாரிப்புதிரைப்படம்மலை

தொடர்புடைய செய்திகள்