நடிகர் திலகம் சிவாஜி நடித்த வெற்றிப்பட வரிசையில் பலர் மனங்களில் நீங்கா இடம்பெற்ற படம் ஒன்று உண்டென்றால் அது அவர் நடிப்புக்குப் புது வடிவம் கொடுத்த படிக்காத மேதை படம்தான். படிப்பறிவில்லாத ஒரு பாலகனை எடுத்து வளர்க்கும் ஒரு பெரியவரின் குடும்பத்தை அந்தப் பாசமிகு, ஆதரவற்ற பையன்தான் இறுதியில் காப்பாற்றுகிறான், ஒன்றுசேர்க்கிறான்.
அந்தப் படத்தின் கதையை எழுதிய பீம்சிங் முதலில் இயக்குநர் ஸ்ரீதரைத்தான் படத்திற்கு உரைநடை எழுதுமாறு கேட்டார். ஆனால், ஸ்ரீதருக்கு அந்தக் கதையில் போதிய வலுவில்லை என்று தோன்றியதால் அதில் ஆர்வம் காட்டவில்லை. எனினும், அப்பொழுது தனது உதவியாளராக இருந்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணனை கேட்டுப் பாருங்கள். அவர் சம்மதித்தால் அவரை நீங்கள் உரைநடை எழுதச் சேர்த்துக்கொள்ளலாம் என்று பிடிகொடுக்காமல் கூறிவிட்டார்.
அவர் கூறியதுபோல் பீம்சிங்கும் கே எஸ் ஜியை அணுக அவரும் கதையை முழுவதுமாகக் கேட்டார். கதையைக் கேட்ட கே எஸ் கோபாலகிருஷ்ணனுக்கு சிவாஜி, ரங்கராவ் ஏற்கும் பாத்திரங்கள் மிகவும் பிடித்துவிட்டது. அவ்விருவர் பாத்திரங்களை வைத்தே படத்தைச் சிறப்பாக எடுத்துவிடலாம் என்று அவருக்குப் புரிந்தது. பீம்சிங்கிடம் உதவி இயக்குநராகவும், படத்திற்கு உரைநடை எழுதுவதற்கும் ஒப்புக்கொண்டார். இயக்குநர் பீம்சிங்கும் கே எஸ் ஜியின் உரைநடைக்கு எவ்விதக் கட்டுப்பாடும் விதிக்காமல் அவரைச் சுதந்திரமாக இயங்க விட்டார்.
கே எஸ் ஜியின் உரைநடை, பீம்சிங்கின் இயக்கம் எனப் படம் இரட்டிப்பு சிறப்பைப் பெற்றது. சிவாஜியை மனத்தில் வைத்து கே எஸ் ஜி அவர்கள் வடித்த உரைநடை படம் சிறப்பாக வருவதற்கு பேருதவி புரிந்தது. அடுத்து சிவாஜிக்கு யாரை ஜோடியாகப் போடலாம் என்ற பேச்சு எழுந்தது. அன்றைய தினத்தில் சாவித்திரி, சரோஜாதேவி போன்றோர்தான் முக்கிய கதாநாயகிகளாக விளங்கினர். அவர்களில் ஒருவரைப் போடலாம் என்று பலரும் நினைக்க கே எஸ் ஜி அதற்கு மாறுபட்டார்.
சிவாஜியின் மனைவியாக அடக்க ஒடுக்கமான, சாந்த முகமுடைய ஒருவர்தான் தேவை என்று அவருக்கு பலமாகப்பட்டது. அவர் அந்தப் பாத்திரத்துக்கு நடிகை சௌகார் ஜானகியே பொருத்தமானவர் என்று வாதிட்டார். அவருடைய எண்ணப்படியே சௌகார் ஜானகியை சிவாஜி மனைவி பாத்திரத்தில் நடிக்க வைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
படமும் வெளிவந்தபின் வெற்றியோட்டம் கண்டது. அதிலும் சிவாஜி, ரங்கராவ் நடிப்பைப் பார்த்தவர்கள் உள்ளமுருகிப் போயினர். குறிப்பாக, தனது வளர்ப்புப் பிள்ளையான சிவாஜியை தனது இரண்டு பிள்ளைகளான அசோகன், முத்துராமன் இருவரும் சிறுமைப் படுத்துவதைப் பொறுக்காமல் சிவாஜியையும் அவரது மனைவி சௌகார் ஜானகியையும் வீட்டைவிட்டுப் போகச் சொல்லும் காட்சி, அதற்கு என்ன இருந்தாலும் தான் வளர்ப்புப் பிள்ளைதானே என்று ஏக்கம் கலந்த சோகத்துடன் சிவாஜி பேசி நடிக்கும் காட்சி கண்ணைவிட்டு இன்றுவரை அகல மறுக்கிறது. அதுபோல், தான் வெளியில் வேலை பார்த்து ரங்கராவுக்குப் பிடித்த சிகரெட் பெட்டியை வாங்கி வரும்போது சம்பாதித்த காசை இப்படி ஊதாரித்தனமாகச் செலவழிக்கிறானே என ரங்கராவ் கோபம் கொண்டு திட்டும்போது சிவாஜி காட்டும் நடிப்பும் ஈடு இணையற்றது. தனது வளர்ப்புப் பிள்ளை போனதும் அவனை எண்ணி அவனுடைய சிறப்பை எண்ணி வேதனையுடன் வாடி, உயிரை விடும் முன் ரங்கராவ் சோகம் தாளாமல் நினைவுகூரும் மகாகவி பாரதியின், “எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான், இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்...” என்ற பாடல் வரிகளில், சிவாஜி, ரங்கராவ் இருவரும் நடிப்பில் சிகரத்தைத் தொடுகின்றனர். பாடல், சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரல், இசை அனைத்துமாகச் சேர்ந்து இந்த ஒரு பாடலே அந்தப் படத்திற்குப் போதுமானது என்று எண்ணவைத்து விடுகிறது.
பின்னர் தான் கைவிட்ட கதையைத் தனது உதவியாளராக இருந்த கே எஸ் கோபாலகிருஷ்ணன் சிறப்பாக இயக்க உதவி புரிந்து உரைநடை எழுதிப் படத்தை வெற்றிகரமாக எடுத்த கோபாலகிருஷ்ணனைப் பாராட்டினார் ஸ்ரீதர். கதை, வசனம் இயக்கம் மூன்றிலும் கே எஸ் ஜி நன்கு தேறிவிட்டார் என்று புகழாரமும் சூட்டினார் அவர்.

