‘இதயம் முரளி’ படம் என் அப்பாவுக்கு செய்த மரியாதை: அதர்வா

‘இதயம் முரளி’ படம் என் அப்பாவுக்கு செய்த மரியாதை: அதர்வா

2 mins read
b7c73528-bc91-4766-a9c6-9f314c0a515f
‘இதயம் முரளி’ படத்தில் ஒரு காட்சி. - படம்: சினியுலகம்
multi-img1 of 2

தனது தந்தை முரளிக்கு ஏதாவது ஒரு செயலைச் சமர்ப்பணம் செய்ய வேண்டும் என்று ஏங்கிய தன் மனத்துக்கு, ‘இதயம் முரளி’ படம் மூலம் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் ஆறுதல் அளித்துள்ளதாகக் கூறுகிறார் நடிகர் அதர்வா.

‘இதயம் முரளி’ திரைப்படம் தன் தந்தைக்கு தாம் ஆத்மார்த்தமாகச் செலுத்திய மரியாதை என்றும் அப்படத்தின் வெற்றி விழாவில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

தமிழ்ச் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகரான அதர்வா, ‘பாணா காத்தாடி’, ‘பரதேசி’, ‘சண்டிவீரன்’ போன்ற படங்களின் மூலம் ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம்பிடித்தவர். இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘பராசக்தி’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கி, தயாரித்த ‘இதயம் முரளி’ திரைப்படம் கடந்த ஜூலை 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இதில் நாயகனாக நடிகர் அதர்வாவும் நாயகிகளாக பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும், நட்டி நட்ராஜ், ரக்ஷன், தமன், நிஹாரிகா, ஃபகத் ஃபாசில் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

தமன் இசையமைத்துள்ள இப்படத்தில் காதல், நகைச்சுவை, உணர்வுபூர்வமான காட்சிகள் என அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தாலும் இப்படம் வசூலில் சோடை போகவில்லை. வெளியான நாள் முதல் இதுவரை இப்படம் ரூ. 15 கோடி வசூலித்ததாகத் திரையுலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், இப்படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் அதர்வா, ‘இதயம் முரளி’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பு தம்மை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

“என் தந்தைக்கு ஏதாவது சமர்ப்பணம் செய்ய விரும்பினேன். ஒரு நல்ல நண்பராக ஆகாஷ் பாஸ்கரனே அதைச் செய்துவிட்டார். என் அப்பா முரளிக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் படம் அழகாக அமைந்துவிட்டது.

“இப்படத்தில் நடிகர் சின்னி ஜெயந்த் பேசிய வசனங்களும் ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா’ பாடலும் என் கண்களைக் குளமாக்கிவிட்டன,” என்றார் அதர்வா.

அவரது தந்தையான நடிகர் முரளி ‘இதயம்’ தமிழ்ப் படத்தில் நடித்துப் பிரபலமானார். அது அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

குறிப்புச் சொற்கள்