நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் திரையுலக ஜாம்பவான்கள்

நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் திரையுலக ஜாம்பவான்கள்

1 mins read
9229e83c-0c02-4b6e-9f14-22a40e5ef96a
ரஜினி, கமல் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். - படம்: இந்து தமிழ் திசை

திரையுலகின் இரு துருவங்களான ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் சுமார் நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.

‘ஜெயிலர்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்தப் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். ரஜினிகாந்திற்கு இது 174வது திரைப்படமாகவும், கமல்ஹாசனுக்கு 238வது திரைப்படமாகவும் அமையவுள்ளது.

ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர் 2’ திரைப்படப் பணிகளை முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து சி.பி. சக்கரவர்த்தி இயக்கத்தில், கமல்ஹாசனின் ‘ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ தயாரிக்கும் படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

அப்படத்தின் பணிகள் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிலையில், அதற்கடுத்ததாக ரஜினி, கமல் இணையும் பிரம்மாண்டத் திரைப்படம் தொடங்கப்பட உள்ளது.

ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘சரியான கதை அமைந்தால் இணைந்து நடிப்போம்’ என்று இருவருமே ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான சூழல் கனிந்துள்ளது.

இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்புக்கான முன்னோட்டக் காணொளிப் படப்பிடிப்பு, சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 8) தொடங்கியது.

தொடரும் இந்தப் படப்பிடிப்பில் இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பல தசாப்தங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் ஒன்று சேர்வது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்