‘வாத்தி’ படத்தை இயக்கிய வெங்கி அட்லூரியின் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‘லக்கி பாஸ்கர்’.
நேரடித் தெலுங்குப் படம் என்றாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மற்ற மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர்.
“மனிதர்களின் வாழ்க்கையில் பணம் என்பது இன்று மட்டுமல்ல, எப்போதுமே ஒரு விளையாட்டை ஆடும். அதை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப் படத்தை உருவாக்கி உள்ளோம்,” என்கிறார் துல்கர் சல்மான்.
இப்படத்தின் முன்னோட்டக் காட்சித்தொகுப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் வசூலிலும் சாதித்து வருவதாகத் தகவல்.
‘இதுதான் இந்தியா. இங்கு பொருள் வேண்டுமென்றால் பணம் கொடுத்து வாங்க வேண்டும்’. மரியாதை வேண்டுமானால் நம் உடல் மீது பணம் தெரிய வேண்டும்’ என்பன போன்ற வசனங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை.
இந்தப் படத்தில் ஆறு வயது குழந்தைக்குத் தாயாக நடித்துள்ளார் மீனாட்சி சௌத்ரி.
“கதை கேட்டதும் பல நடிகைகள் பின்வாங்கிவிட்டதாக இயக்குநர் கூறி தெரிந்துகொண்டேன். ஆனால், நான் கதை கேட்டபோது எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அதனால்தான் கொஞ்சம்கூட தயக்கம் இல்லாமல் நடிக்க ஒப்புக்கொண்டேன்,” என்கிறார் மீனாட்சி.
அண்மையில் வெளியீடு கண்ட ‘குண்டூர் காரம்’, ‘கோட்’ ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். தென்னிந்திய திரையுலகில் முக்கியமான நடிகையாக உருவெடுத்து வரும் மீனாட்சி கைவசம் பல பெரிய படங்கள் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சரி ‘லக்கி பாஸ்கர்’ கதை என்ன?
“1980களில் மும்பையில் நடக்கும் கதை இது. வங்கியில் சராசரியான ஊதியத்துக்கு வேலை பார்க்கும் இளைஞன் ஒருவன் வறுமையில் வாடுகிறான்.
“என்னதான் வறுமை அலைக்கழித்தாலும் சுற்றியுள்ள உலகம் பலவிதமாக விமர்சித்தாலும் பாஸ்கருக்கு அழகான பெண், காதலியாகி பின்னர் மனைவியாகிறார். பிறகு ஒரு குழந்தையும் பிறக்கிறது.
“இந்நிலையில் தன் வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தம் வேண்டுமென நினைக்கும் பாஸ்கர் அதற்குப் பணம்தான் முக்கியம் எனக் கருதுகிறான்.
அந்தப் பணத்தை சம்பாதிக்க அவன் எந்த எல்லை வரை போகிறான் என்பதும் அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதும் தான் கதை,” என்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.
இதில் வில்லன் என யாரும் கிடையாது. எனினும் ஒரு சராசரி மனிதனுக்குள் இருக்கும் இன்னொரு பக்கத்தை இந்தக் கதை காட்சிப்படுத்துவதாக சொல்பவர், அந்த இருள் சூழ்ந்த இன்னொரு பக்கம் பாஸ்கரை என்னவாக மாற்றுகிறது என்பதை இப்படம் அலசும் என்கிறார்.
இதில் தமிழ் நடிகர் ராம்கியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சொல்லப்போனால் இப்படத்தின் கதையைத் துவங்கி வைக்கும் கதாபாத்திரமே ராம்கிதானாம்.
“அனைத்து மொழியிலும் என்னை ஏற்றுக்கொள்கிறார்கள்.
“இதன் ரகசியம் என்ன என்று நண்பர்களும் திரையுலகத்தினரும் கேட்கிறார்கள். ஒரு வகையில் இதுதான் எனக்கு வாய்த்துள்ள அதிர்ஷ்டம் என நினைக்கிறேன். நான் பிறந்த வீட்டிலிருந்தே எனக்கான அதிர்ஷ்டம் தொடங்கிவிட்டது.
“நான் பணத்துக்காக நடிக்க முடியாது. இவரிடம் இல்லாத பணமா. ஏன் இப்படியெல்லாம் கதையை தேர்வு செய்கிறார் என்று எளிதில் கைநீட்டிச் சொல்லிவிடுவார்கள். அதனால்தான் நல்ல கதை, கதாபாத்திரங்களாகத் தேடி நடிக்கிறேன். ‘பான் இந்தியா’ என்ற வார்த்தைக்கு நான் மயங்க மாட்டேன். உண்மையில் இப்படி குறிப்பிடுவதை நான் வெறுக்கிறேன்,” என்று சொல்லும் துல்கர் சல்மான், காதல் கதைகளைத் தவிர்க்கிறாராம்.
“இன்னும் சில நாள்களில் எனக்கு நாற்பது வயதாகிவிடும். அதன் பிறகும் நான் காதல் படங்களில் நடித்துக்கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா?
“நிறைய இளையர்கள் வந்துவிட்டனர். காதலிக்கும் வேலையை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நான் வித்தியாசமான கதை, கதாபாத்திரங்களில் கவனம் செலுத்த விரும்புகிறேன்,” என்கிறார் துல்கர் சல்மான்.