பறை இசையின் இனிமையை, எளியவர்களின் வாழ்வியலைச் சொல்லும் படம் ‘மாண்புமிகு பறை’

2 mins read
995ced16-7a64-462b-861e-3648acf887ef
‘மாண்புமிகு பறை’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஆர்யன்

‘கான்ஸ்’ திரைப்பட விழாவில் ஒரு படம் திரையிடப்படுவது என்பது, ஒரு படைப்பாளிக்குக் கிடைத்த ஆக அதிகமான அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

அந்த வகையில், ‘மாண்புமிகு பறை’ என்ற தமிழ்ப்படம் ‘கான்ஸ் 25’ திரை விழாவில் அதிகாரபூர்வ போட்டிப் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

சட்டமன்ற மேடையில் நம்மையெல்லாம் கவர்ந்த திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நடித்திருக்கும் படம் இது.

விஜய் சுகுமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்.

மேலும் காயத்ரி, ஆர்யன் ஆகியோருடன் சேரன்ராஜ், கஜராஜ், காதல் சுகுமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

இப்படத்தின் முக்கியமான காட்சிகள் திருச்சி மாவட்டம், துறையூரில் படமாக்கப்பட்டுள்ளன.

எளிய மக்களின் இசைக் கருவி பறை. அதிலிருந்து வரும் இசையையும் எளிய மக்களின் வாழ்வியலையும் மிக யதார்த்தமாக இந்தப் படத்தில் பதிவு செய்திருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் விஜய் சுகுமார்.

“பறை இசையின் பெருமையைச் சொல்லும் இப்படம், எல்லா இசையும் ஒன்றே என்ற கருத்தையும் முன் வைக்கும். அதே சமயம் மற்ற இசைக் கருவிகளுக்கு மரியாதையும் புகழும் பறை இசைக்குக் கிடைப்பதில்லை.

“அந்தப் பறை இசையின் பின்னணியில் உள்ள வலியை, பெருமையைச் சொல்லும் படைப்பு என்றும் கூறலாம்,” என்கிறார் விஜய் சுகுமார்.

இப்படத்தின் கதை, திரைக் கதையை சுபா-சுரேஷ் ராம் எழுத, அனைத்து பாடல்களையும் சினேகன் இயற்றியுள்ளார்.

கொளஞ்சி குமார் ஒளிப்பதிவைக் கவனிக்க, நடன இயக்குநராக ஜானி பங்களித்துள்ளார்.

இப்படம் ‘கான்ஸ்’ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதை அடுத்து, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, விரைவில் திரையரங்குகளில் வெளியிட படத்தின் தயாரிப்புத் தரப்பு ஏற்பாடு செய்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்