புதுமுகங்களைக் கொண்டு உருவான படம் ‘மாயபிம்பம்’

2 mins read
230e550d-ac3b-4d5e-9ef6-3fe55a5e9d1f
‘மாயபிம்பம்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

அறிமுக இயக்குநர் சுரேந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘மாயபிம்பம்’ படம்.

தலைப்பைப் போலவே கதையும் வித்தியாசமாக இருக்கும் என்கிறார் இயக்குநர்.

நாயகன் மருத்துவக் கல்லூரியில் படிக்கிறான். அவனுக்கு மூன்று நண்பர்கள். நான்கு பேரும் இணைபிரியாத நண்பர்களாக மாறுகிறார்கள்.

இந்நிலையில், நான்கு பேரும் எதிர்பாராத விதமாக ஏதோ ஒன்று செய்யப்போக அது கடைசி எல்லை வரைக்கும் எப்படி அவர்களைத் துரத்துகிறது, எப்படி அவர்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறது, அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதுதான் கதையாம்.

இதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள்?

“நண்பர்கள் மூலமாக தீமை, நன்மை என இரண்டும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. நல்லது அமைந்தால் எப்படி இருக்கும், தீயது மட்டுமே வந்து சேர்ந்தது என்றால் எவ்விதமாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறோம். உண்மையைச் சொல்லும்போது அதன் விளிம்பு வரை எட்டிப் பார்க்கும் முனைப்பு எனக்கு எப்போதும் உண்டு.

“எனக்கு நேர்மை வெற்றிபெறுமா என்பது தெரியாது. ஆனால் நியாயம் என்பது நிச்சயமாக ஒருநாள் உலகத்திற்குப் புரியும். இதை மட்டும் தெரிந்து வைத்திருக்கிறேன்.

“தமிழ் சினிமா பெண்ணின் காதலை ஆண்களின் கோணத்தில் இருந்து மட்டுமே இதுவரை பார்த்துள்ளது. ஒரு வித்தியாச முயற்சியாக, பெண்களின் பக்கமிருந்தும் சொல்லி இருக்கிறேன்,” என்கிறார் சுரேந்தர்.

இந்தக் கதைக்கு புதுமுகங்களே தேவைப்பட்டனராம். புதியவர்களால்தான் இந்தக் கதையைச் சரியான, உணர்வுபூர்வமான தளத்திற்குக் கொண்டு போகமுடியும் என்றும் நம்பியதாகச் சொல்கிறார்.

‘மாயபிம்பம்’ படத்தில் ஹரி கிருஷ்ணன், ஆகாஷ் பிரபு, ராஜேஷ், அருண்குமார், ஜானகி ஆகிய நால்வரும் அருமையாக நடித்துள்ளதாகக் குறிப்பிடும் இயக்குநர் சுரேந்தர், புதுமுகங்கள்தான் தேவை என்ற தனது முடிவு தவறாகவில்லை என்கிறார்.

“புது விஷயங்கள் வெற்றிபெற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் என்னைப் போன்ற இளையர்களுக்கு நம்பிக்கை தரும். என்னுடைய முதல் படமும் அத்தகைய நம்பிக்கையைத் தரும் என நம்புகிறேன்,” என்கிறார் சுரேந்தர்.

இந்தப் படத்தில் ஜானகி கதை நாயகியாக நடிக்க, நந்தா இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவாளர் எட்வின், படத்தொகுப்பாளர் வினோத் ஆகியோரும் புதுமுகங்கள் தானாம்.

குறிப்புச் சொற்கள்