திரைப்படத் தயாரிப்பும் கற்றலின் ஒரு பகுதிதான்: சமந்தா

2 mins read
b5d76c16-6b24-4b42-a616-2386e3279da6
சமந்தா. - படம்: ஊடகம்

ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக தாம் அதிகம் கற்றுக்கொண்டதாகச் சொல்கிறார் நடிகை சமந்தா.

“துணிந்து செயல்படாமல், சவால்களைச் சந்திக்காமல் அர்த்தமுள்ள எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு, இவர் ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் (Tralala Moving Pictures) என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார்.

அந்த நிறுவனத்தின் முதல் படமாக உருவாகி இருக்கிறது ‘சுபம்’.

சாதாரணமான, வழக்கமான கதைகளைவிட இந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் சமூக கட்டமைப்பில் உள்ள வலிமையானதும் சிக்கலானதுமான கதைகளைப் பேசலாம் என தொடக்கத்திலேயே அறிவித்திருந்தார் சமந்தா.

அதைவிட முக்கியமான தனது நிறுவனத்தில் பணியாற்றுவோர்க்கு, ஆண் - பெண் என்ற பேதமின்றி ஒரே மாதிரியான ஊதியம்தான் வழங்கப்படும் என்பதை கொள்கை முடிவாகவும் தெரிவித்தார்.

‘சுபம்’ தெலுங்குத் திரைப்படம் மே 9ஆம் தேதியன்று வெளியாகிறது.

இந்நிலையில், தயாரிப்பாளராக தனது அனுபவங்கள் குறித்து அவர் ஒரு பேட்டியில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

“துணிந்து முடிவுகளை எடுப்பதிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்கியதில்லை. பெரும்பாலும், அந்தத் துணிவு எனக்குப் பலனளித்துள்ளது.

“கடந்த 15 ஆண்டுக் கால திரைத்துறைப் பயணத்தில் நான் கற்றுக்கொண்டதன் அடிப்படையில், நான் சொல்ல விரும்பும் கதைகளை அணுகுவதற்கான நுண்ணறிவையும் அனுபவத்தையும் பெற்றுள்ளதாக நம்புகிறேன்.

“ஒரு நடிகையாக இருப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என்றாலும், திரைப்படத் தயாரிப்பும் கற்றலின் ஒரு பகுதி என்றே நினைக்கிறேன்.

ஒரு தயாரிப்பாளராக இருக்கும்போது, ​​திரைப்படத் தயாரிப்பின் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதில் நம்ப முடியாத அளவிற்கு மனநிறைவும் இருக்கிறது,” என்று சமந்தா கூறியுள்ளார்.

திரைத்துறையில், ஒரு நடிகையாக இருந்து தாம் கற்றுக்கொண்டதை விட இந்தப் படத்தைத் தயாரித்ததின் மூலம் நிறையக் கற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தாம் கற்றுக்கொள்ள, பங்களிக்க இன்னும் நிறைய இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள சமந்தா, குறிப்பிட்ட வகை படங்களுக்கு மட்டும் தம்மை மட்டுப்படுத்தாமல் பரந்தளவிலான கதைகளைக் கேட்க ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்