தமிழ்த் திரையுலகில் அழகிய கவிதை நடையில் பாடல்கள் எழுதிப் பெயர் பெற்று வந்த கவிஞர்களான கு மா பாலசுப்பிரமணியன், உடுமலை நாராயண கவி, அ மருதகாசி போன்றோர் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி ஆர் சுந்தரம் தயாரித்த ‘பாசவலை’ படத்திற்கு குறிப்பிட்ட ஒரு காட்சிக்குப் பாடல் எழுதத் தடுமாறினர்.
அந்தச் சமயத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் அலுவலகத்தின் சுலைமான் என்பவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல் எழுதும் திறமையை உணர்ந்தார். அவருக்கு வாய்ப்புக் கொடுக்க எண்ணி பாடல் காட்சியை விவரித்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைப் பாடல் ஒன்று எழுதி வரச் சொன்னார்.
பாடல் காட்சி இதுதான். மன்னர் ஒருவர் காட்டில் மாறுவேடத்தில் தனது தம்பியைத் தேடி அலையும் சமயம் நஞ்சு கலந்த நீரைக் குடித்து புத்தி பேதலித்த நிலையில் ஆடு மேய்ப்பவர்களுடன் திரிந்து கொண்டிருக்கிறார். அவரை அடையாளம் காணும் தம்பி, தான் அவருடைய சொந்தம் என்பதைக் கூறி அண்ணனுக்கு நினைவூட்ட முயற்சி செய்கிறார். அதற்குத்தான் ஒரு பாட்டு தேவை.
மேலே குறிப்பிடப்பட்ட பாடகர்களால் விஸ்வநாதன் போடும் மெட்டுக்கு ஏற்றவாறு பாடல் வரிகளைத் தர முடியவில்லை. அதற்கு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திடம் பாட்டு எழுதி வாங்கிய சுலைமான், இசையமைப்பாளர் விஸ்வநாதனிடம் அதனைக் கொண்டு வருகிறார்.
அவரோ ஏற்கெனவே மூன்று கவிஞர்கள் படும் சிரமத்தைப் பார்த்து நொந்துபோன நிலையில், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடலைப் பார்க்காமலேயே போகச் சொல்கிறார். திரும்பிப் போன கவிஞரை மறுநாளும் சுலைமான் அழைத்து வருகிறார்.
அப்பொழுதும் அவரைப் பார்க்காமலேயே திருப்பி அனுப்பும் எம் எஸ் வியிடம் மூன்றாவது முறையாக அடுத்த நாளும் வந்த சுலைமான், பாடலை ஒருமுறை பார்க்குமாறும், அது பிடிக்கவில்லை என்றால் கல்யாணசுந்தரத்தைப் போகச் சொல்லலாம் என்றும் கூறுகிறார். நம்பிக்கை இல்லாமல் பாடல் வரிகளைப் பார்க்கும் விஸ்வநாதனுக்கு தூக்கிவாரிப் போட்டது.
அது என்ன வரிகளா - “குட்டி ஆடு தப்பி வந்தா குள்ளநரிக்கு சொந்தம், குள்ளநரி மாட்டிக்கிட்டா குறவனுக்கு சொந்தம், தட்டுக்கெட்ட மனிதர்களில் பட்டதெல்லாம் சொந்தம், சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம், உனக்கெது சொந்தம், எனக்கெது சொந்தம் உலகத்துக்கு எதுதான் சொந்தமடா...” என்று வரும் பாடல்.
படக்காட்சிக்கும் அச்சடித்தாற்போல் பொருந்தும் பாடல். அதற்கு உடனே இசையமைத்து பாட்டைப் பதிவு செய்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை ஏற இறங்கப் பார்த்துப் பாராட்டினார். பின்னர், இப்படியொரு நல்ல கவிஞனை இழக்க நினைத்தேனே என்று கண்ணீர் விட்டு அழுதார் விஸ்வநாதன்.
தொடர்புடைய செய்திகள்
அதுவரை வந்த கவிஞர்கள் எல்லாம் நல்ல கவிதை வரிகளுடன் சிறந்த பாடல் எழுதியவர்கள் என்றாலும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மட்டும்தான் கண்ணதாசனைப் போல் மக்கள் சாதாரணமாகப் பேசும் மொழியில் பாடல் வரிகளை அமைத்து மக்களைக் கவர்ந்தவர். கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் யாவும் எழுச்சிப் பாடல்கள், அதாவது கேட்பவரைத் துள்ளி எழ வைத்து துடிப்புடன் செயல்பட வைக்கும் தன்மை கொண்டவை.
மக்கள் திலகம் எம் ஜி ஆர், மக்களிடம், தாங்கள் விரும்பும் கருத்தைச் சொல்லி தனக்கும் மக்களுக்கும் இடையே ஒரு நீங்கா தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைத்த காலகட்டத்தில் அவருக்காக பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல்கள் பல எம் ஜி ஆரின் புகழை உச்சாணிக்குக் கொண்டு சென்றன.
அவற்றில் சில, நாடோடி மன்னன் படத்தில் வரும் “தூங்காதே தம்பி தூங்காதே, சோம்பேறி என்ற பெயர் வாங்காதே,” ‘சக்கரவர்த்தித் திருமகள்’ படத்தில் வரும் “பொறக்கும்போது பொறந்த குணம் போகப் போக மாறுது, எல்லாம் இருக்கும்போது பிரிந்த குணம் இறக்கும்போது சேருது,” “திருடாதே பாப்பா திருடாதே, வறுமை நிலைக்கு பயந்துவிடாதே, திறமை இருக்கு மறந்துவிடாதே,”.
இவருடைய கம்யூனிச பொதுவுடமைக் கருத்தை இரண்டு பாடல்களில் மிகத் தெளிவாக வெளிவரும். ஒன்று ‘அரசிளங்குமரி’ படத்தில் வரும் “சின்னப் பயலே, சின்னப் பயலே சேதி கேளடா, நான் சொல்லப்போற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா.” அதில் வரும், “மனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வையடா தம்பி, வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது கையடா நீ வலது கையடா, தனியுடமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா, தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா...,” என்று ஏகாதிபத்திய பொருளியல் முறையைச் சாடுவார்.
அதேபோல், இரும்புத் திரையில் வரும், “எளிய மக்கள் தலையில் காசு ஏறி மிதிக்குது, இதை எண்ணி எண்ணி தொழிலாளர் நெஞ்சு கொதிக்குது” என்ற பாடலும் நம்மைப் புல்லரிக்க வைக்கும்.
இவருடைய பாடல் வரிகளை அடிக்கடி மாற்றச் சொல்லி இயக்குநர் ப நீலகண்டனை வம்புக்கு இழுக்கும் விதமாக, “பொறக்கும் போது பொறந்த குணம் போகப் போக மாறுது” பாடலில், “கால நிலையை மறந்து சிலது கம்பையும் கொம்பையும் நீட்டுது, புலியின் கடும் கோபம் தெரிந்திருந்தும் வாலப் பிடிச்சி ஆட்டுது, வாழ்வின் கணக்குப் புரியாமல் ஒண்ணு காசைத் தேடிப் பூட்டுது, ஆனால், காதோரம் நரைச்ச முடி கதை முடிவக் காட்டுது,” என்று இயக்குநரின் முதுமையைக் கிண்டல் செய்திருப்பார்.

