பணம் கொடுத்து படம் பார்க்க ரசிகர்கள் காத்திருந்த காலம் போய்விட்டது. இப்போது பணம் கொடுத்து வாங்கப்படும் விமர்சனங்கள்தான் ஒரு படத்தின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கிறது.
- இந்தப் புலம்பல் சத்தம் தமிழ்த் திரையுலகத்தின் தலைநகரம் எனக் கருதப்படும் கோடம்பாக்கத்தில் ஓங்கி ஒலிக்கிறது.
விமர்சனம் இல்லையென்றால் எந்தவொரு கலையும் வளராது என்பது திரையுலகத்தினருக்குத் தெரியாதா? என்று இன்னொரு பக்கம் எதிர்கருத்து கிளம்பியுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் நடிகர் சங்கத்தின் பொதுக் குழுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் வடிவேலு, தமிழ்த் திரையுலகம் இன்று எதிர்கொண்டுள்ள முக்கியப் பிரச்சினை குறித்து ‘நச்’சென்று சில கருத்துகளை முன்வைத்தார்.
விமர்சனங்களால் தமிழ் சினிமா பெரிதும் பாதிக்கப்படுகிறது என்பதுதான் அவரது பேச்சின் சாராம்சம்.
இணையத் தளங்களில், சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிய நாள் முதல் இந்தப் பிரச்சினை இருந்து வருகிறது.
தனிப்பட்ட காரணங்களை முன்வைத்து செய்யப்படும் விமர்சனங்களால் ரசிகர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். நல்ல படங்கள் தோல்வி அடைகின்றன. இதனால் சினிமா வியாபாரம் படுத்துவிட்டது என்பதே திரையுலகைச் சேர்ந்த பலரது புலம்பலாக இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
சினிமா என்பது பெரிய தொழில். ஒருசிலரது பொறுப்பற்ற செயலால் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் நசுக்கப்படுகிறது என்பது திரையுலகத்தினரின் கோபமாகவும் உள்ளது.
யூடியூப், இணையத்தள விமர்சனங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எல்லா விவரங்களும் தெரியும். ஆனாலும், தங்களுடைய செயல்பாட்டை நிறுத்துவதாக இல்லை.
இந்நிலையில், நடிகர் சங்கப் பொதுக்குழுவில் பேசிய நடிகர் வடிவேலு, திரையுலகத்தில் ஒற்றுமை கொஞ்சம் குறைவாக உள்ளது என்றார்.
“அனைவரும் ஒற்றுமையாகச் செயல்பட வேண்டும். சமூக ஊடகங்களில் திரையுலகைப் பற்றி கண்டபடி பேசுகிறார்கள். பெரியவர், சிறியவர் என்றுகூட பார்க்காமல் விமர்சிக்கிறார்கள். அவர்களுக்கு திரையுலகைச் சேர்ந்த சிலரே ஆதரவு அளிக்கிறார்கள்.
“பத்துப் பேர் சேர்ந்து திரையுலகை ஒழிக்கத் திட்டமிடும்போது, நம்மைத் தூங்கவிடாமல் செய்யும்போது நாமும் அவர்களைத் தூங்கவிடாமல் செய்ய வேண்டும்,” என்றார் வடிவேலு.
இதனிடையே, புதுப் படங்களைக் காப்பாற்ற தயாரிப்பாளர் சங்கம் புது வழி கண்டுபிடித்திருக்கிறது. இனி ஒரு திரைப்படம் வெளியான முதல் மூன்று நாள்களுக்கு யூடியூப், சமூக ஊடகங்களில் எந்தவிதமான சினிமா விமர்சனங்களையும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்பதே அந்தப் புது வழியாம்.
கடந்த ஆண்டு டிசம்பரில் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விமர்சனங்களுக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும், யூடியூப் நிறுவனம், மத்திய, மாநில அரசுகள் விமர்சனங்களை முறைப்படுத்த விதிகள் வகுப்பது தொடர்பாக பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், ‘குங்குமம்’ ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், திரையுலகம் சார்ந்த சிலர் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர்.
“மின்னிலக்க ஊடக வளர்ச்சி, மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் பத்து யூடியூபர்கள் செய்வது மட்டுமே விமர்சனம் அல்ல. கைப்பேசி வைத்துள்ள ஒவ்வொரு ரசிகர்களும் மீடியாவாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்,” என்கிறார் திரை விமர்சகர் செய்யாறு பாலு.
பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் படம் பார்க்க வரும் ரசிகர்களுக்கு மனநிறைவு ஏற்படாதபோது அந்த விரக்தியில் சிலர் கருத்துகளைப் பதிவிடுகிறார்கள். அதற்காக ரசிகர்ளைக் குறைகூறக் கூடாது என்றும் திரு பாலு சொல்கிறார்.
சமூக ஊடகங்களில் வெளியாகும் விமர்சனங்கள் நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்கிறார் திரைப்பட இயக்குநர் ஆர்.கண்ணன்.
“ஒரு படத்தை முதன்முறை பார்த்த உடனேயே, அதிலும் உடனுக்குடன் அதன் நிறை குறைகளை சரியாகச் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. மூன்று, நான்கு நாள்களுக்குப் பிறகே அதைச் செய்ய முடியும்.
“தொழில்முறை விமர்சகர்கள் கவனத்துடன் விமர்சிக்க வேண்டும். சினிமா பொழுதுபோக்குத் தளமே அன்றி அறிவுக்களஞ்சியம் அல்ல. எனவே, மனத்தைக் காயப்படுத்தும் அளவுக்கு வன்மத்தை விமர்சனங்களில் வெளிப்படுத்துவது சரியல்ல,” என்றும் கண்ணன் கூறுகிறார்.
ஆனால், சிறிய படங்களுக்கு விமர்சனங்கள் பெரிதும் உதவுகிறது என்பதே இயக்குநர் சீனுராமசாமியின் கருத்தாக உள்ளது. விமர்சனம் என்றால் ஒரு படத்தைப் பார்க்கத் தூண்ட வேண்டும் என்றும் தனிநபர் தாக்குதலாக இருக்கக்கூடாது என்றும் அவர் கூறுகிறார். இது கவலை அளிக்கக்கூடிய விஷயம், தீர்வு காண வேண்டியது அவசியம் என்றும் சீனுராமசாமி வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், மூத்த செய்தியாளர் ‘வலைப்பேச்சு’ ஆர்.எஸ்.அந்தணன் கூறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
தமிழ்த் திரையுலகம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தயாரிப்பாளர்களும் முக்கியமான காரணம் என்கிறார்.
“திரையுலகில் ‘முதல் நாள் முதல் காட்சி’ என்பதை (First Day First Show - FDFS) எனக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, முதல் காட்சியைப் பார்க்கும் ரசிகர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிப்பார்கள்.
“தயாரிப்பாளர்கள் பலரும் தங்களுடைய படங்கள் வெளியாகும்போது ஐம்பது பேருக்கு இலவசமாக டிக்கெட் கொடுத்து படம் பார்க்க அனுப்புவார்கள். அவர்களும் படம் பார்த்து முடித்த பிறகு, அது குறித்து ‘ஆஹா ஓஹோ’ எனப் பாராட்டுவார்கள்.
“இதன் அடுத்தகட்டமாக ரசிகர்கள் சிலரே குளிர் கண்ணாடி அணிந்து, வித்தியாசமான ஒப்பனையுடன் தோன்றி யூடியூபில் விமர்சனம் செய்யத் தொடங்கினர். இப்படிப்பட்டவர்களை சில தொலைக்காட்சி நிறுவனங்கள் தொடர்புகொண்டு படம் பார்த்து விமர்சிக்குமாறு கேட்டுக்கொள்ள, இந்த ஏற்பாடு இருதரப்புக்கும் வசதியாக இருந்தது.
“பிடித்த நடிகர் என்றால் சற்றே அடக்கிவாசிக்கும் இந்த ரசிகர்கள், பிடிக்கவில்லை என்றால் கிழித்துத் தொங்கவிடுவார்கள். இதற்கும் பிறகே இன்றைய பிரச்சினைக்குக் காரணமாகக் கூறப்படும் யூடியூபர்கள் வருகிறார்கள்.
“எனவே, தயாரிப்பாளர் சங்கம் தொடங்கி வைத்த ‘முதல் நாள் முதல் காட்சி’ என்ற வழக்கம்தான் இன்றைய இந்த விமர்சனப் பிரச்சினைக்கு அடிப்படை காரணம்,” என்கிறார் ‘வலைப்பேச்சு’ அந்தணன்.
‘அன்னக்கிளி’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கோலோச்ச தொடங்கிய இளையராஜாவே ஒரு காலத்தில் விமர்சகர்களால் கண்டுகொள்ளப்படாதவர்தான்.
‘அன்னக்கிளி’ பட விமர்சனத்தில் இளையராஜா பெயரே இடம்பெறவில்லை. இன்று அவரது உயரம் என்னவென்பது உலகுக்குத் தெரியும்.
நடிகர் விஜய்யை, ‘இதெல்லாம் ஒரு முகமா’ என்று விமர்சித்த பிரபல ஊடகம்தான் பின்னாள்களில் அவரை சிறந்த நடிகர் எனப் போற்றிப் புகழ்ந்தது.
எத்தனை விமர்சனங்கள் மறைப்பதாக கூறினாலும், உண்மையான திறமையை யாராலும், எதனாலும் மறைக்க முடியாது என்பதே உண்மை.