இரு தெய்வங்களைப் பற்றிய படம் ‘சேயோன்’

இரு தெய்வங்களைப் பற்றிய படம் ‘சேயோன்’

2 mins read
1f79c3e5-e099-427f-9bad-24211908b097
‘சேயோன்’ படச் சுவரொட்டி. - படம்: இந்து தமிழ் திசை

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு ‘மதராஸி’, ‘பராசக்தி’ ஆகிய படங்களில் நடித்தார் சிவகார்த்திகேயன்.

தற்போது ‘சேயோன்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் சிவா. படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

இது கிராமத்துப் பின்னணியைக் கொண்ட படம். நெற்றியில் பட்டை, கையில் அரிவாளுடன் தோற்றமளிக்கிறார் சிவா.

“விருமாண்டி, முருகர் ஆகிய இரு கடவுள்களை வணங்குபவர்களைப் பற்றிய படம்தான் ‘சேயோன்’. யாருக்கும் எதிராகவோ, சாதகமாகவோ இருக்காது. அனைத்து தெய்வங்களுக்கும் மரியாதை கொடுக்கும் படமாக இது இருக்கும்,” என்று கூறியுள்ளார் அதன் இயக்குநர் சிவகுமார் முருகேசன்.

‘அமரன்’ படத்துக்குப் பிறகு ‘பராசக்தி’யில் நடிக்க, தனது எடையைக் கணிசமாகக் குறைத்துவிட்டார் சிவா. தற்போது ‘சேயோன்’ படத்துக்காக மீண்டும் தனது உடல் எடையை அதிகரிக்கிறாராம்.

இதில் கதாநாயகியாக நடிப்பது பாக்யஸ்ரீ போர்ஜ் என்பது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டதாம். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக மதுரையில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் அங்கேயே தங்கியிருப்பதாகவும் தெரிகிறது.

படப்பிடிப்பை இம்மாதம் தொடங்க உள்ளதாகவும் குறுகிய காலத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘தாய் கிழவி’ படத்தைத் தயாரிக்க சிவகார்த்திகேயன் முன்வந்தார். படம் பாதி முடிந்த நிலையில், அதுவரை திரையிட்ட காட்சிகளைப் பார்த்த சிவா, இயக்குநர் சிவகுமார் முருகேசனிடம் இருந்த மற்றொரு கதையையும் கேட்டுவிட்டாராம். அதில் தாமே நடிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

‘அமரன்’ படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசனும் சிவாவும் இணைந்து மீண்டும் இணைந்து பணியாற்ற திட்டமிட்டிருந்தனர். அதனால் இந்தக் கதையைக் கேட்டுப்பாருங்கள் என கமலிடம் சொன்னார் சிவா. கமலுக்கும் கதை பிடித்துப்போனது. இப்படித்தான் ‘சேயோன்’ படம் உருவானது.

இதற்காகவும் தனது உடல் எடையை அதிகரிக்கப் போகிறாராம் சிவா. கிராமத்து சேயோன் வேடம் என்பதால் கரடுமுரடாக இருக்கும்படியான தோற்றத்துக்கு அவர் மாற உள்ளார். இதனால் உடற்பயிற்சிக் கூடத்தில் அதிக நேரம் செலவிடுகிறாராம்.

இதற்கிடையே, படத்தில் முன்னணி நடிகர் ஒருவர் கௌரவ வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அக்கதாபாத்திரம் கதையில் சுவாரசியமான திருப்புமுனையைக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

அந்த நடிகர் கமல்தான் என்றும் பல ஆண்டுகளக்கு முன்பு அவர் நடித்த ‘விருமாண்டி’ படத்தின் பாத்திரமாகவே தோன்றப்போவதாகவும் கூறப்படுகிறது.

முருகன், விருமாண்டி ஆகிய இரு தெய்வங்களை வழிபடும் மக்கள் குறித்துச் சொல்லும் இப்படத்தில், சிவகார்த்திகேயன் முருகன் என்ற பெயருடனும் கமல் விருமாண்டி என்ற பெயருடனும் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

‘சேயோன்’ படத்தில் கமல் நடிப்பது உறுதியானால், படத்தின் வணிக மதிப்பு மற்றும் எதிர்பார்ப்பு பல மடங்கு உயரும்.

எதிர்வரும் ஆயுத பூசை நாளன்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் சினிமா ஆர்வலர்களுக்கும் தரமான விருந்து காத்திருப்பதாக கமல், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படத்தை ஆயுத பூசையன்று வெளியிட கமல் முடிவு செய்துவிட்டார். படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் வேகமாக நடந்துகொண்டிருப்பதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்