தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘கை’க்கு எட்டாதது வாட’கை’க்கு எட்டும்

4 mins read
6b7630aa-d3a4-44ab-ad7c-956cdaea24ad
நடிகர் மம்மூட்டி - படம்: ஊடகம்
multi-img1 of 6

சினிமா ரசிகர்களுக்கு அவர்களுடைய அபிமான நடிகரின் வீடுதான் திருத்தலம், சுற்றுலாத்தலம்.

சில நடிகர்களின் வீட்டுப் பக்கம் போனால், மொழி தெரியாத காவலாளிகளால் விரட்டப்படுவார்கள் ரசிகர்கள். சில நடிகர்கள் வீட்டு மாடிக்கு வந்து ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்துவார்கள்.

நம்ம ‘கதாநாயகன்’ வீடு எப்படி இருக்கும், வீட்டுக்குள் என்ன இருக்கும், இதெல்லாம் நாம் பார்க்க முடியாதா எனும் வருத்தம் ரசிகர்களை வாட்டி வதைக்கும்.

இந்நிலையில், புகழ்பெற்ற திரை நட்சத்திரங்கள் சிலர் தங்களின் பிரம்மாண்ட வீடுகளை, சுற்றுலா நிறுவனங்களுடன் இணைந்து வாடகைக்கு விடுகிறார்கள்.

ஆனாலும், சாதாரண ஏழை ரசிகர்களுக்கு இந்த வீடு தரிசனம் கிடைக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், அன்றாட வாடகை, அவ்வளவு பெரிய தொகை.

யாரெல்லாம் தங்கள் மாளிகைகளை சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விட்டிருக்கிறார்கள் எனப் பார்க்கலாம்.

ஷாருக்கானின் அமெரிக்கா வீடு:

பாலிவுட்டின் ‘கிங் கான்’ என அழைக்கப்படும் ஷாருக்கானிற்கு இந்தியாவின் மும்பை, டெல்லி, மங்களூர் நகரங்களிலும், அமெரிக்கா, இங்கிலாந்திலும் ஆடம்பர மாளிகைகள் உள்ளன.

இதில், கர்நாடக மாநிலம் மங்களூர் வீட்டைப் பிரபல தனியார் சுற்றுலா நிறுவனம் மூலம் மிகமிக முக்கியமானவர்களுக்கு வாடகைக்கு விடுகிறார்.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ‘பெவர்லி ஹில்’சில் உள்ள ஆடம்பர இல்லத்தைச் சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

ஆறு படுக்கை அறைகள் கொண்ட இந்த சொகுசு பங்களா, டென்னிஸ் திடல், பெரிய நீச்சல் குளம் உள்ளிட்ட பிரம்மாண்ட, நவீன வசதிகளைக் கொண்டுள்ளது.

ஒரு குடும்பம், ஒரு நாள் இரவு இங்கு தங்குவதற்கு இந்திய மதிப்பில் இரண்டு லட்சம் ரூபாய் வாடகை.

‘பாகுபலி’ பிரபாசின் இத்தாலி வில்லா:

டோலிவுட் பிரபாஸ், ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் 84 ஏக்கர் பரப்பளவில் பண்ணையுடன் கூடிய மாளிகையில் வசிக்கிறார்.

மும்பையிலும் வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளார்.

இத்தாலியில் பிரம்மாண்ட வில்லா ஒன்றும் வைத்துள்ளார் பிரபாஸ். இதில், தான் பயன்படுத்தும் சில அறைகளை மட்டும் பூட்டிவிட்டு, இதர பகுதிகள் கொண்ட வில்லாவை வாடகைக்கு விட்டுள்ளாராம்.

இதன் மூலம் பிரபாசுக்கு மாதம் சுமார் 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைப்பதாக சில தரகர்கள் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

மம்மூட்டியின் கேரள வீடு:

கேரள முன்னணி நாயகன் மம்மூட்டிக்கு சில வீடுகள் உள்ளன.

பாரம்பரியமாக தாங்கள் வசித்து வந்த பனம்பிள்ளி நகர் வீட்டிலிருந்து வைட்டிலாவில் இருக்கும் அம்பேலிபாதம் வீட்டிற்கு குடிபெயர்ந்துவிட்டார் மம்மூட்டி.

நான்கு படுக்கையறைகள், வீட்டுத் திரையரங்கம், மம்மூட்டியின் ‘சூட் ரூம்’ எனப்படும் பெரிய அறை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. இந்த வீட்டைச் சுற்றுலா விருந்தினர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். தனியார் சுற்றுலா நிறுவனம் இதன் பொறுப்பை எடுத்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து முன்பதிவு அடிப்படையில் ஒரு குடும்பம் தங்க ஒரு நாளுக்கு ரூ.75,000 கட்டணம்.

மோகன் லாலின் ஊட்டி பங்களா:

கேரளா, கொச்சியில் தேவாரா பகுதியில் மம்மூட்டி வசித்து வருகிறார்.

கேரளா எலந்தூர், துபாயில் ஒரு அடுக்குமாடி சொகுசு குடியிருப்பு, தன் மாமனார், மறைந்த நடிகர், தயாரிப்பாளர் கே.பாலாஜியின் வகையில் வந்த சென்னை எழும்பூரில் உள்ள சொத்து என மோகன் லாலுக்கு பல சொத்துகள் உள்ளன.

தன் குடும்பத்தினர், நண்பர்களுடன் கோடையைக் கழிக்க ஊட்டியில் பிரம்மாண்ட ஓய்வு இல்லம் ஒன்று மோகன்லாலுக்குச் சொந்தமாக உள்ளது. இந்த ஊட்டி பங்களாவைச் சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

கடந்த மே மாதம் முதல் முன்பதிவில் வாடகைக்கு விடப்படுகிறது. இந்த பங்களா வாடகை ஒரு நாளைக்கு ரூ.37,000 ஆகும்.

ஸ்ரீதேவியின் சென்னை பங்களா:

‘மயிலு’ ஸ்ரீதேவியின் ஆடம்பர பங்களா சென்னை கடற்கரைச் சாலையில் உள்ளது.

அவரது மறைவிற்குப் பிறகு, எப்போதாவது அவரது குடும்பத்தினர் இங்கே வந்து தங்குவார்கள்.

அண்மையில், ஸ்ரீதேவியின் மூத்த மகளும் பாலிவுட் இளம் நாயகியுமான ஜான்வி கபூர் இந்த பங்களாவில் சில நாள்கள் தங்கியிருந்தார்.

நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் நவீன வசதிகள், பல படுக்கையறைகள், நீச்சல் குளம் இதில் உண்டு. இந்த பங்களாவை சும்மா பூட்டிவைக்க விரும்பாத ஜான்வி, சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு வாடகைக்கு விட முடிவு செய்தார்.

கடந்த மே மாதம் முதல், முன்பதிவு அடிப்படையில் இது வாடகைக்கு விடப்படுகிறது.

இதில் இன்னொரு முக்கியமான அம்சம் என்னவென்றால், ஸ்ரீதேவியின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்ட பால்கோவா, பருப்புப் பொடி, நெய் கலந்த சோறு உள்ளிட்ட தமிழக, ஆந்திர, கேரள, கர்நாடக சிறப்பு உணவுகள் தயாரித்துத் தரப்படும்.

ஸ்ரீதேவியின் குடும்பத்தாருக்குச் சமைக்கும் இந்த பங்களா சமையல் கலைஞர்கள், இங்கு தங்குபவர்களுக்கு உணவு தயாரித்துத் தருவார்கள்.

“என் அம்மா, அப்பா, தங்கையுடன் சிறு வயதில் இங்கு வந்து தங்கிய அனுபவங்கள் இனிமையானவை. எங்கள் குடும்பத்தின் சரணாலயமாக இந்த வீடு திகழ்கிறது,” என நெகிழ்ந்திருக்கிறார் சின்ன ‘மயிலு’.

எது எப்படி என்றாலும், பாமர ரசிகர்களுக்கு தங்கள் அபிமான திரை நட்சத்திரங்களின் வீட்டுக்குள் போகும் பாக்கியம் கிடைக்காது.

மம்மூட்டி போட்ட பாதை:

பிரபலங்கள் தங்கள் வீட்டை வாடகைக்கு விடும் பழக்கம் முன்னமே இருந்தாலும், திடீரென இப்போது இந்தத் தொழில் வளரக் காரணம் மம்மூட்டி தன் வீட்டை வாடகைக்கு விட்டதுதான்.

அதைப் பின்பற்றி தங்களின் வீடுகளை சுற்றுலாவாசிகளின் விடுதியாக்க பல நட்சத்திரங்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்