‘பழக்கம்’ என்பது கைவிட முடியாததாக ஆகும்போது, அது ‘வழக்கம்’ என்று ஆகிவிடுகிறது.
நல்ல பழக்கம் வழக்கமானால் அது நல்லது, கெட்ட பழக்கம் வழக்கமானால் அது வாழ்க்கையில் சிக்கலை உண்டாக்கும்.
சாதாரணமானவர்களுக்கு இருப்பதுபோல், பிரபலமானவர்களுக்கும் சில விநோத பழக்க, வழக்கங்கள் உண்டு. சில சமயம் அவை மிகவும் விசித்திரமானதாகவும் இருக்கும்.
சினிமாவில் நம்மை வியப்பில் ஆழ்த்தும் பல நட்சத்திரங்களின் பழக்க, வழக்கங்கள் நமக்கு விசித்திரமாகவும் தோன்றும். அப்படி வியக்க வைக்கும் சில நட்சத்திரங்களின் விசித்திர பழக்க வழக்கங்களைப் பார்ப்போம்.
நயன்தாரா: ஆறாம் விரல்!
நயன்தாராவின் இடது கையில் பெருவிரலையொட்டி, சட்டென்று பார்த்தால் தெரியாதபடி மிகச் சிறிய ஆறாவது விரல் ஒன்று முளைத்திருக்கும்.
முதலில் அந்த ஆறாம் விரலை சிகிச்சை மூலம் அகற்ற நினைத்தார். ஆனால், அந்த விரல் இருப்பது நல்ல ராசி என சிலர் சொல்ல, சிகிச்சைத் திட்டத்தைக் கைவிட்டார்.
ஓய்வு நேரங்களில், மன உளைச்சல் மிகுந்த நேரங்களில் அந்த விரலைத் தடவிக்கொடுத்து கொஞ்சும் பழக்கம் நயன்தாராவிடம் உண்டு. சிறு குழந்தையைப் போல் அடம்பிடிக்கும் பழக்கமும் நயனிடம் உண்டு.
தொடர்புடைய செய்திகள்
சமந்தா: செல்ஃபி காய்ச்சல்!
சமந்தாவுக்கு செல்ஃபி மீது கொள்ளை மோகம்.
சக நடிகைகள், ரசிகர்களைச் சந்திக்க நேர்ந்தால், அவர்களுடன் வலியப்போய் செல்ஃபி எடுத்துக்கொள்வார்.
பிரியங்கா சோப்ரா: காலணி பிரியை!
பிரியங்கா சோப்ராவுக்கு விதவிதமான காலணிகளைச் சேகரிக்கும் பழக்கம் உண்டு.
தன் வீட்டில் ஒரு அலமாரி முழுவதும் விதவிதமான காலணிகளை அடுக்கி வைத்திருக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா: ‘இடுக்கண் வருங்கால் நகுக’!
‘இடுக்கண் வருங்கால் நகுக’ - அதாவது, துன்பம் வரும் வேளையில் சிரிக்க வேண்டும் என்றார் வள்ளுவப் பெருந்தகை.
மனவருத்தம் உண்டாகும் நேரங்களில் வாய்விட்டுச் சிரித்துவிடுவாராம் ராஷ்மிகா மந்தனா.
இது பிரச்சினையை எதிர்கொள்ளும் மனோபாவத்தைத் தரும். அவருடைய இந்தப் பழக்கம் குறித்து, ரசிகர்களுடனான வலைத்தள கலந்துரையாடலின்போது தெரிவித்துள்ளார் ராஷ்மிகா.
அனன்யா பாண்டே: அழுதால் அழகு!
நடிகை அனன்யா பாண்டேவிடம் உள்ள விநோதப் பழக்கம், புகைப்படம் எடுப்பதற்கு முன்போ, சினிமாவில் ‘குளோஸ்-அப்’ காட்சி எடுப்பதற்கு முன்போ, சில நிமிடங்கள் அழுவார்.
அழுதால் முகம் அழகாகத் தெரியும் என தன்னுடைய விசித்திர பழக்கத்திற்கு விளக்கம் சொல்கிறார் அனன்யா.
சுஷ்மிதா சென்: நிலாக்குளியல்!
‘ரட்சகன்’ பட நாயகி சுஷ்மிதா சென்னுக்கு இரவு நேரத்தில் மொட்டை மாடியில் குளிக்கும் பழக்கம் உள்ளது. அதிலும் நிலா வெளிச்சத்தில் குளிப்பது மிகவும் பிடிக்குமாம்.
இதற்காகத் தன் வீட்டு மொட்டை மாடியில் நவீன வசதிகள் கொண்ட குளியலறையை நிறுவியுள்ளார்.
எம்ஜிஆரும் கைக்கடிகாரமும்!
எம்ஜிஆர் விதவிதமான கைக்கடிகாரங்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்.
அதிலும், இடது கையில் கடிகாரம் கட்டும் பழக்கத்தை நிஜ வாழ்விலும் திரை வாழ்விலும் கடைப்பிடித்து வந்தார்.
‘இதயக்கனி’ பட நாயகி ராதாசலுஜாவுக்கு இது மிக தாமதமாகவே தெரிய வந்தது.
எம்ஜிஆர் முதன்முறையாக தமிழக முதல்வரான சமயம். ஒரு இந்திப் படப்பிடிப்பிற்காக மும்பை சென்ற இயக்குநர் கே.சங்கர், ராதாசலுஜாவைச் சந்தித்தார்.
அப்போது விலை உயர்ந்த கடிகாரம் ஒன்றை எம்ஜிஆருக்கு பரிசாகக் கொடுத்தனுப்பினார். அதை ஆர்வத்துடன் வாங்கிப் பார்த்த எம்ஜிஆர், தனது சேகரிப்பில் வைத்துக்கொண்டார்.
தனது ராமாவரம் வீட்டில் குடியேறிய பின்னர், எம்ஜிஆர் தான் வளர்த்த ஒரே பசுமாட்டின் பாலைத்தான் குடித்து வந்தார்.
எம்.ஆர்.ராதா: உரைச்சோறு!
எம்.ஆர்.ராதா மிகச் சத்தமாகவும் மென்மையாகவும் மாறிமாறிப் பேசி அலட்டலாக நடிப்பார்.
இதற்கான ‘எனர்ஜி’க்கு அவருடைய உணவுப்பழக்கம் விசேஷமானது. இரவு ஒரு சிறிய சட்டியில் சோறாக்கி, அதில் சிறிதளவு உரைத்தயிர் விட்டு, நிறைய பால் ஊற்றி மூடிவைத்துவிடுவார்கள்.
காலையில் சட்டிச்சாப்பாடு கெட்டித்தயிரில் ஊறியிருக்கும். அதைத்தான் காலை உணவாகச் சாப்பிடுவார். இது எம்.ஆர்.ராதாவின் பல்லாண்டுப் பழக்கம்.
ஷாருக் கான்: தூங்கும்போதும்!
காலையில் குளியல் போட்டுத் தயாராகி, அதன்பின் அணியும் காலணியை (ஷூ) சாமானியமாகக் கழற்றமாட்டார் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான்.
பலநாள்களில் ‘ஷூ’வுடனேயே தூங்கிவிடுவார். மறுநாள் காலை குளிக்கச் செல்லும் போதுதான் கழற்றுவாராம்.
சூர்யா: கட்டுப்பாடு... அதைக் கட்டிப்போடு!
சூர்யா மிகக் கட்டுக்கோப்பாக உடலை வைத்திருப்பார். அதனால் உணவுக் கட்டுப்பாடு அவரிடம் உண்டு.
உறவினர்கள் வீட்டிற்கு வந்தால், ‘விருந்தாளிகளை நன்றாகக் கவனிக்க வேண்டாமா?’ என ஜோதிகாவிடம் சொல்லிவிட்டு, விதவிதமான உணவு வகைகள் (சைவம், அசைவம்) உணவகத்தில் இருந்து வரவழைப்பார்.
உறவினர்களை உபசரிக்கும் சாக்கில், அன்று சூர்யாவும் வயிறாரச் சாப்பிட்டுவிடுவார். மறுநாள் தான் உண்டதற்கு ஏற்ப, தீவிர உடற்பயிற்சி செய்துவிடுவார்.
விக்ரம்: உப்புக் கருவாடு... ஊற வச்ச சோறு!
விக்ரமுக்கு பழைய சோற்றில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கிப்போட்டு, கருவாடு தொட்டுக்கொண்டு சாப்பிடுவது பிடித்த விஷயம்.
கமல்: ஈசல் வறுவல்!
கிராமங்களில் பால் ஈசல் எனப்படும் ஈசல்களைச் சேகரித்து, அதை வெறும் சட்டியிலிட்டு வறுத்து, புடைத்தால் இறக்கைகள் தனியாக உதிர்ந்துவிடும்.
அதன் பின்னர், வறுத்த ஈசலைக் கருப்பட்டி சேர்த்து, உரலில் இடித்துச் சாப்பிடுவார்கள். இது மிகவும் சக்திவாய்ந்த உணவாகக் கருதப்படுகிறது.
எப்போதாவது புற நகரில் இருந்து சேகரித்துக் கொண்டு வரப்படும் ஈசல்களை நெய்யில் வறுத்துச் சாப்பிடும் பழக்கம் கமல்ஹாசனிடம் உண்டு.
ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு எதிரே உள்ள சாம்கோ உணவகத்தில் தயாராகும் புரோட்டா, ஆப்பம், ஆட்டுக்கால் பாயா ஆகியவை கமலுக்குப் பல்லாண்டுகளாகப் பிடித்த உணவாகும்.
விஜய்: முகத்திற்கு நேர்!
தன்னிடம் பிறர் ஏதாவது சொன்னால், அதை ஏற்க முடியாததாக இருந்தால், அவர்களின் முகத்திற்கு நேரே சிரித்துவிடுவார் விஜய். இந்தப் பழக்கத்தை தன்னால் மாற்றிக்கொள்ள முடியவில்லை எனவும் விஜய் ஒரு மேடையில் தெரிவித்துள்ளார்.
நடிப்பில் நவரசம் காட்டும் ரஜினி, சாப்பிடும்போது ரசத்தைக் கிண்ணத்தில் வாங்கிக் குடிக்கும் பழக்கம் கொண்டவர்.
வேக வைக்காத, தாளிதம் செய்யாத காய்கறிகளை உண்ணும் பழக்கம் அஜித்திடம் உள்ளது.
இப்படி ஒவ்வொரு பிரபலத்துக்கும் ஒவ்வொரு பழக்க வழக்கம் இருக்கிறது.
நல்ல பழக்கங்கள் பல்லாண்டு வாழ்க, கெட்ட பழக்கங்கள் விரைவில் ஒழிக!