விஜய் சேதுபதி நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தை இயக்கியவர் ஆறுமுக குமார்.
அவர் தாமே தயாரித்து, இயக்கிய விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘ஏஸ்’ படத்தை வெளியிட்டார். ஆனால் படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்த விஜய் சேதுபதி, “இப்படி ஒரு படம் வெளியானது என்பதே மக்களுக்குத் தெரியவில்லை. படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடத்தாததால் படம் குறித்து யாரும் பெரிதாகப் பேசவில்லை,” என்று கூறியுள்ளார்.
இதனிடையே, விஜய் சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள, ‘தலைவன் தலைவி’ படம் விரைவில் வெளியீடு காண உள்ளது.
இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சேதுபதியும் பாண்டிராஜும் மீண்டும் இணைந்து பணியாற்ற இருப்பதாக இப்போதே தகவல் வெளியாகி உள்ளது.
அநேகமாக, இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என்று விவரம் அறிந்தோர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், விஜய் சேதுபதியும் இயக்குநர் நித்திலனும் அமெரிக்கா பறந்திருக்கிறார்கள். அங்கிருந்து திரும்பும்போது ‘மகாராஜா-2’ படத்துக்கான கதையுடன் வருவார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்தியா மட்டுமல்லாமல், சீனா உள்ளிட்ட சில நாடுகளிலும் முத்திரை பதித்த இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.