கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அரசன்’ பெரிய அளவில் உருவாகி வருகிறது.
இப்படத்தை தீபாவளியை முன்னிட்டு நவம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதற்காக படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், ‘அரசன்’ படத்தின் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
சில நாள்களுக்கு முன்பு ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைத்துப் பிரச்சினைகளும் சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.
தீபாவளி வெளியீட்டை இலக்காகக் கொண்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு பகலாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நடிகர் சிம்பு எக்ஸ் தளத்தில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காணொளி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
“அரசன் படத்தின் முக்கியமான படப்பிடிப்பு காட்சிகள் நிறைவடைந்தது. இப்போது சற்று ஓய்வெடுத்து புத்துணர்ச்சிப் பெற்று, அடுத்தகட்டத்திற்குத் தயாராகும் நேரம்,” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
காணொளியில், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், “இந்த ஷெட்யூல் முடிந்தது” என்று அறிவித்தவுடன் படக்குழுவினரும் சிலம்பரசனும் உற்சாகமாக கொண்டாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு சிலம்பரசன் கைகொடுத்து வாழ்த்து தெரிவிக்கும் தருணங்களும் அந்த காணொளியில் இடம்பெற்றுள்ளன.
‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி, சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா ஜெரமியா, அமீர், கிஷோர், விக்ராந்த், யோகலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

