கார்த்திக்காக காத்திருக்கும் படங்கள், இயக்குநர்கள்

3 mins read
59f06fa6-a409-466d-b040-119cd5f1674e
கார்த்தி. - படம்: ஊடகம்

வித்தியாசமான, சவாலான கதைக்களம் அல்லது கதாபாத்திரம் தயாராக உள்ளது என்றால் இயக்குநர்கள் நம்பிக்கையுடன் நடிகர் கார்த்தியை அணுகலாம்.

மாஸ் நாயகன், நகைச்சுவை, காதல் நாயகன் என்று தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்துடன் கச்சிதமாகப் பொருந்திவிடுவார்.

தற்போது நலன் குமாரசாமியின் `வா வாத்தியார்’, பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில் `சர்தார்-2’ ஆகிய இரு படங்களில் நடித்து முடித்திருக்கிறார் கார்த்தி.

அடுத்தடுத்து அசத்தலான கதைகளுடன் உருவாகும் படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்கியுள்ளார்.

‘டாணாக்காரன்’ தமிழ், லோகேஷ் கனகராஜ், மாரிசெல்வராஜ் என அவருக்காகக் காத்திருக்கும் இயக்குநர்களின் பட்டியலும் நம்மை அசர வைக்கிறது.

இவை போதாது என ‘காதல் + அதிரடி’ கலந்த படங்களைக் கொடுக்கும் இயக்குநரிடம் ஒரு கதை கேட்டு, அதில் நடிக்கவும் சம்மதித்துள்ளாராம்.

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இப்போது பின்னணிக் குரல், இசைப்பதிவுப் பணிகள் நடந்து வருகின்றன.

கோடையில் திரைக்குக் கொண்டு வரும் திட்டமிடல்களும் ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கிறது. இதில் எம்ஜிஆரின் தீவிரமான ரசிகராக வருகிறார் கார்த்திக்.

சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஆனந்த்ராஜ், ஷில்பா மஞ்சுநாத் எனப் பலரும் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

‘சர்தார்’ படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் கார்த்தி. இரு தோற்றங்களிலுமே அவரது நடிப்பு பரவலாகப் பாராட்டுகளைப் பெற்றது.

அதேபோல் இரண்டாம் பாகத்திலும் அவரது தோற்றம் அசத்தலாக இருக்குமாம். இதுவரை 80% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகத் தகவல்.

இதையடுத்து, படத்தின் தொழில்நுட்பப் பணிகளும் தொடங்கிவிட்டன. சில நாள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளதாம்.

சென்னையில் கடைசிக்கட்ட படப்பிடிப்பில் சில காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். இதில் எஸ்.ஜே.சூர்யா, ஆஷிஷ் வித்யார்த்தி, ரஜிஷா விஜயன், ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன் நடித்து வருகின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

‘சர்தார்-2’ படத்துக்காக சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைத்துள்ளனர்.

ஒரு சண்டைக் காட்சியைப் படமாக்கியபோது கார்த்திக்கு காலில் அடிபட்டு காயம் ஏற்பட்டது. இப்போது அவர் ஓய்வில் இருக்கிறார். ஆனாலும் மற்ற நடிகர்களை வைத்து சில காட்சிகளைப் படமாக்கி வருகிறார்களாம்.

இதற்கடுத்து, `டாணாக்காரன்’ தமிழ் இயக்கும் படத்திற்கு வருகிறார் கார்த்தி. இது அவருக்கு 29வது படமாகும்.

ராமேசுவரம் - இலங்கை கடற்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் நடந்த, கடற்கொள்ளையர்கள் பற்றிய கதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகிறது.

இந்தப் படங்களை முடித்துக் கொடுத்த பிறகுதான் லோகேஷ் கனகராஜின் ‘கைதி-2’ பட வேலைகள் தொடங்க உள்ளன. தவிர, தற்போது ‘பைசன்’ படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜும் கார்த்தியை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், அண்மையில் இயக்குநர் கௌதம் மேனன், கார்த்தியைச் சந்தித்து ஒரு கதைச் சுருக்கத்தைக் கூறினாராம்.

சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்திற்குப் பின் கௌதம் மேனன், எழுத்தாளர் ஜெயமோகன் கூட்டணி மீண்டும் இணைவதாகக் கூறப்பட்டது இந்தப் படத்துக்குத்தானாம்.

இதன் கதை, திரைக்கதையை ஜெயமோகன் எழுதக்கூடும் என்றும் கௌதம் மேனன் படத்தை இயக்குவதோடு நிறுத்திக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

சூர்யாவுக்கு இரண்டு வெற்றிப் படங்களைத் தந்த கௌதம் கார்த்தியை வைத்து இயக்குவதால் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் முன்பே கார்த்தி ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்