வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி சுதந்திர தினத்துக்கு முதல் நாள் திரையரங்குகளில் சில புதிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.
இதன் காரணமாகத் தமிழ் திரையுலகில் மும்முனைப் போட்டி ஏற்படும் சூழல் தற்போது உருவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சூர்யா, மமிதா பைஜு இணைந்து நடித்துள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இத்திரைப்படம், ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக, சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது போட்டிக்கு எந்தவொரு படங்களும் திரைக்கு வருவதில்லை.
இருப்பினும், விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், இவ்விரு படங்களுடன் மூன்றாவதாக விஷால் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ திரைப்படமும் ஆகஸ்ட் 14ஆம் தேதியை வெளியீட்டு நாளாகக் குறிவைத்துள்ளது.
ஒருவேளை ‘மகுடம்’ படமும் ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று திரைக்கு வந்தால், திரையரங்குகள் இந்த மூன்று படங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
இதனால், ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்கு வெளியீடானது தமிழ் சினிமாத் துறையில் ஒரு சுவாரசியமான மும்முனைப் போட்டியாக மாற வாய்ப்புள்ளது.
மூன்று திரைப்படங்களும் ஒரே நாளில் திரையரங்குகளில் மோதிக்கொள்வதால், சூர்யா படத்தின் திரையரங்க எண்ணிக்கையும் காட்சிகளும் பெரிதும் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் திரைக்கு வரவுள்ளதால் திரையரங்க உரிமையாளர்களும் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
சுதந்திரத் தினத்தை ஒட்டி தொடர் விடுமுறை நாள்கள் வருவதால், அதைப் பயன்படுத்தி வசூலைக் குவிக்க தயாரிப்பாளர்கள் விரிவான திட்டம் தீட்டியுள்ளனர்.

