மறுபிறவி எடுக்கும் கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாகும் படங்கள் என்றாலே எப்போதும் இந்திய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
எனினும் திரையில் தோன்றும் கதாபாத்திரங்களின் தன்மை ஏற்கக்கூடிய வகையில் இருப்பது அவர்களுக்கு மிக அவசியம்.
காதல் நிறைவேறாமல் போனவர்கள், கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காகவும் பழிவாங்குவதற்காகவும் மறுபிறவி எடுப்பவர்கள்தான் இந்த வகைப் படங்களில் பெரும்பாலும் முக்கியக் கதாபாத்திரங்களாக இருப்பார்கள்.
இத்தகைய படங்கள் வசூலிலும் சாதிக்கக்கூடியவை. அவ்வாறு சாதித்த பத்து படங்களின் பட்டியல் இது.
‘ஏக் பஹேலி லீலா’
இது ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ.28 கோடி வசூலை அள்ளிய இந்திப் படம்.
300 ஆண்டுகளுக்கு முன்பு இளம் பெண் லீலா காதல் வயப்படுகிறாள். காதலர்கள் கொல்லப்பட, காதல் முழுமை அடையாமல் இருக்கிறது. இதையடுத்து இருவரும் 300 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபிறவி எடுப்பதும் அதன் பின்னர் நடக்கும் சம்பவங்களும்தான் கதை.
2015ஆம் வருடம் வெளியான இப்படத்தை பாபிகான் இயக்கி இருந்தார். இதன் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியான வேளையில், யூடியூப்பில் அதிகமான பார்வைகளை அள்ளிய இந்திப் படத்தின் தொகுப்பு என்ற பெருமையைப் பெற்றது.
‘கல்கி 2898 ஏடி’
நடிகர்கள் கமல்ஹாசன், அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் என முன்னணிக் கலைஞர்கள் பங்கேற்ற படம் இது.
தொடர்புடைய செய்திகள்
பவுண்டி ஹண்டர் பைரவா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரபாஸ். அவர் மகாபாரதக் காலத்தில் வாழ்ந்த கர்ணனின் மறுபிறவி என்று தெரியும்போது அனைவரும் அதிர்ச்சிக்கு ஆளாகிறார்கள்.
ரூ.600 கோடி செலவில் உருவாகி, ரு.1,100 கோடியைக் குவித்த இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருந்தார்.
‘அருந்ததி’
ரூ.13.5 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.70 கோடியை அள்ளியது ‘அருந்ததி’ தெலுங்குப் படம். இதன் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா.
துணிச்சலான ராணி ஒரு மந்திரவாதியுடன் மோதி, அவனை வீழ்த்துகிறாள். அந்த ராணியின் சந்ததியினரை வேட்டையாடுவதற்காக மூன்று தலைமுறைகள் கழித்து வருகிறான் அந்த மந்திரவாதி.
பேத்தியின் தோற்றத்தில் மறுபிறவி எடுக்கும் அந்த ராணி மந்திரவாதியை எப்படி வீழ்த்துகிறாள் என்பதே திரைக்கதை. பேத்தியாகவும் பாட்டியாகவும் நடிப்பில் அசத்தி இருப்பார் அனுஷ்கா.
‘மதுமதி’
மறுபிறவியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஆரம்ப காலப் படங்களில் முக்கியமானது ‘மதுமதி’ இந்திப் படம். பிமல் ராயின் இயக்கத்தில் 1958ல் வெளியானது. ரூ.81 லட்சம் செலவில் உருவாகி, ரூ.நான்கு கோடியை அள்ளியது.
ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதால் ஒரு குறைந்த கட்டண விடுதியில் தங்குகிறான் நாயகன். ஆனால், அவனுக்கு அந்த இடம் ஏற்கெனவே நன்கு பழக்கமானதாக இருக்கிறது. அவனுடைய முற்பிறவி நினைவுகள் வர, கதை சூடுபிடிக்கிறது.
திலீப் குமாரும் வைஜெயந்தி மாலாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
‘ஈகா’
மொத்தம் ரூ.30 கோடி செலவில் உருவாகி, ரூ.125 கோடி அள்ளியது தெலுங்குப் படம் ‘ஈகா’. தமிழில் ‘ஈ’ என்ற தலைப்பில் வெளியானது. பெரிய வெற்றியைப் பதிவு செய்த படம் இது.
சமந்தாவைக் காதலிக்கிறார் நானி. இன்னொரு பக்கம் சமந்தா மீது ஆசையுடன் இருக்கிறார் சுதீப். பொறாமையில் நானியைக் கொலை செய்துவிடுகிறார் சுதீப்.
பின்னர் சிறு ‘ஈ’ ஆக மறுபிறவி எடுக்கும் நானி, எப்படி சுதீப்பை பழி தீர்த்துக்கொள்கிறார் என்பதை திரைக்கதையுடன் சுவாரசியமாக இயக்கி இருப்பார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி.
‘ஷியாம் சிங்கா ராய்’
கதைப்படி, திரைப்பட இயக்குநர் வாசு மீது கதைத் திருட்டுக் குற்றம் சுமத்தப்படுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஷியாம் சிங்கா ராய் எழுதிய நாவலைத் திருடினார் என்பதே குற்றச்சாட்டு.
இந்நிலையில், ஷியாம் சிங்கா ராயின் மறுபிறவிதான் வாசு என்று தெரிய வருகிறது. ஆனால், அதை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியாது. வாசு என்பது நிரூபிக்கப்பட்டு, அவன் எப்படி குற்றச்சாட்டில் இருந்து தப்பிக்கிறான் என்பதுதான் கதை. ஷியாமாகவும் வாசுவாகவும் நடித்திருந்தார் நானி. படத்தின் இயக்குநர் ராகுல் சங்கிருத்யன்.
‘மகதீரா’
இந்திய சினிமாவில் பேரதிர்வை உண்டாக்கிய தெலுங்குப் படம் இது. மறுபிறவியை மையமாக வைத்து, சுவாரசியமான, வசூலை அள்ளும் ஒரு படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்திருந்தார் இப்படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி.
2009ஆம் ஆண்டிலேயே ரூ.150 கோடி வசூலை அள்ளியது இப்படம். இதன் பட்ஜெட் ரூ.35 கோடிதான்.
ராஜாங்கத்தையும் இளவரசியையும் காப்பாற்றுவதற்காக தனது உயிரையும் தருகிறான் மாவீரன் பைரவா.
400 வருடங்களுக்குப் பிறகு மறுபிறவி எடுக்கும் அவன், எப்படி மறுபிறவி எடுத்திருக்கும் இளவரசியைக் கண்டுபிடித்து, அவளுடன் இணைகிறான் என்பது சுவாரசியமாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
‘கரண் அர்ஜுன்’
1995ல் வெளியான வெற்றிபெற்ற படம். வட இந்தியாவில் இப்போது மறுவெளியீடாகி, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
சல்மான் கானும் ஷாருக் கானும் இணைந்து நடித்த இந்திப் படம் இது. ரூ.43 கோடியை வசூலாக அள்ளியது. இதன் மொத்தச் செலவு வெறும் ரூ.6 கோடிதான்.
கரணும் அர்ஜுனும் சகோதரர்கள். எதிரிகளால் கொல்லப்படுகின்றனர். மகன்கள் இருவரும் திரும்பி வர வேண்டும் எனக் கடவுளை வேண்டுகிறார் அவர்களின் தாய்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு கரணும் அர்ஜுனும் வெவ்வேறு இடங்களில் பிறந்து, வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் எப்படி ஒன்றாக இணைந்து, தங்களைக் கொலை செய்தவர்களை பழிவாங்குகின்றனர் என்பதே கதை. இப்படத்தை ராகேஷ் ரோஷன் இயக்கி இருந்தார்.
‘ஓம் சாந்தி ஓம்’
வெறும் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ.152 கோடியை அள்ளிய இந்திப் படம் இது. கடந்த 1970களில் நடக்கும் கதை.
துணை நடிகரான ஓம் என்பவர் கதாநாயகன் ஆக வேண்டும் என்ற வேட்கையுடன் இருக்கிறார். அவருக்குப் புகழ் பெற்ற ஒரு நடிகையின் மீது தீவிர காதலும் ஏற்படுகிறது. திடீரென அவர் கொலை செய்யப்படுகிறார்.
மறுபிறவி எடுக்கும் ஓம், முற்பிறவியில் தாம் யார் என்று கண்டுபிடித்து, தனக்கான நீதியைத் தேடிக்கொள்வதுதான் திரைக்கதை. இப்படத்தின் இயக்குநர் ஃபரா கான்.
எ டாக்’ஸ் ஜேர்னி
நாய்களின் மறுபிறவியை வைத்தும் நிறைய படங்கள் வந்துள்ளன. அவற்றில் முக்கியமானது இந்தப்படம். பட்ஜெட்டைவிட நான்கு மடங்கு அதிகமாக வசூலைக் குவித்த படமும்கூட.
ஈதனின் செல்ல நாய் பெய்லி. தனது பேத்தியைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என பெய்லியிடம் வேண்டுகிறார் ஈதன்.
பெய்லி எப்படி மறுபிறவி எடுத்து ஈதனின் பேத்தியைப் பாதுகாக்கிறது என்பதே ‘jha’. கெயில் மான்குசோ இயக்கத்தில் உருவான படம் இது.