தமிழ் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்ஐகே) படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் திரையரங்க வசூல் நன்றாக இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், படக்குழு சார்பாக நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய விக்னேஷ் சிவன், இப்படம் வெளியானதே பெரிய வெற்றிதான் எனக் குறிப்பிட்டார்.
“படத்திற்கு நிறைய விமர்சனங்கள் வருகின்றன. படக்காட்சிகள் மெதுவாக நகர்கிறது என்று சொல்கிறார்கள். அனைத்தையும் ஆக்கபூர்வமான விமர்சனமாகப் பார்க்கிறேன்.
“புதிதாக முயற்சி செய்த விஷயங்களுக்குக் கைதட்டல் கிடைக்கிறது. பிரதீப் ரங்கநாதன் இருந்ததால்தான் இப்படம் வெற்றிப் படைப்பாக உருவாகி உள்ளது. இல்லையென்றால் இப்படியொரு படம் வெளியாகியிருக்க வாய்ப்பில்லை,” என்றார் விக்னேஷ் சிவன்.
தற்போது இயக்குநர்களின் சூழல் கவலைக்கிடமாக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியானது அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.
தனது நண்பரான அப்படத்தின் இயக்குநர் வினோத்துக்கு ஆறுதல் கூறியதாகவும் இதுபோன்ற நடவடிக்கைகள் மரணத்தைப் போன்ற வலியைக் கொடுக்குமெனவும் விக்னேஷ் சிவன் வருத்தத்துடன் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பிரதீப் ரங்கநாதன் நூறு விழுக்காடு உழைப்பைக் கொட்டக்கூடிய நல்ல கதாநாயகன் என்று குறிப்பிட்ட அவர், பிரதீப்புக்கு மக்களின் ஆதரவு உள்ளது என்றார்.
“அவரது (பிரதீப்) நூறு கோடி வசூல்கண்ட படங்களின் வரிசையில் இந்தப் படமும் இணையும். எஸ்.ஜே.சூர்யாவைத் தவிர ‘சூர்யன்’ கதாபாத்திரத்திற்கு வேறு யாரையும் நினைத்துகூடப் பார்க்க முடியாது.
“சீமான் அண்ணன் அவருடைய அரசியல் அம்சங்களைக் கடந்து எங்களுடன் இயல்பாகவும் கலகலப்பாகவும் பழகினார். என்னுடைய வேலையை எளிதாகச் செய்ய அனுமதித்தார்,” என்றார் விக்னேஷ் சிவன்.

