‘முதல் நாள் முதல் காட்சி’ அனுபவம்: இனி கிட்டாதென விஜய் ரசிகர்கள் வருத்தம்

‘முதல் நாள் முதல் காட்சி’ அனுபவம்: இனி கிட்டாதென விஜய் ரசிகர்கள் வருத்தம்

2 mins read
a4b5d1ff-dbcb-4968-8a4d-1968da0fa0fd
பல மாதங்களுக்கு முன்பு இணையத்தில் சட்டவிரோதமாக வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைத் தற்போது ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டு களிக்கின்றனர். - படம்: கே.வி.என் தயாரிப்பு நிறுவனம்

முன்னாள் நடிகரும் இந்நாள் தமிழ்நாட்டு முதலமைச்சருமான விஜய்யின் இறுதித் திரைப்படம் என நம்பப்படும் ‘ஜனநாயகன்’ இணையத்தில் சட்டவிரோதமாகப் பல மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டிருந்தாலும் அதிகாரபூர்வமான திரையரங்க வெளியீட்டிற்கு ரசிகர்களின் வரவேற்பு எள்ளளவும் குறையவில்லை.

உட்லண்ட்சில் அமைந்துள்ள ‘மை சினிமாஸ்’ வளாகத்தில் ஜூலை 23ஆம் தேதி காலை எட்டு மணிமுதல் ரசிகர்கள் அலைகடலெனத் திரண்டனர். திரையரங்கம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது.

காலை 8.30 மணிக்குத் தொடங்கிய காட்சி ஏறக்குறைய 11.45 மணி வரை நீடித்தது.

தமது முதலும் இறுதியுமான விஜய் திரைப்பட ‘முதல் நாள் முதல் காட்சி’ அனுபவமாக இத்திரைப்படம் அமைந்தது மட்டற்ற மகிழ்ச்சியளிப்பதாக காஞ்சனா புரவலன், 20, கூறினார்.

“பல நூறு மக்கள் ஒன்றுகூடி ரசித்து மகிழ அவரது திரைப்படம் காரணமாக இருக்கிறது, இருந்துள்ளது. இதன் பின்பு, அவரது முதலமைச்சர் பொறுப்பில் அவர் எவ்வாறு விளங்குவார் என்பதைக் காண ஆவலுடன் உள்ளேன்,” என்றார் அவர்.

இணையத்தில் திரைப்படம் வெளிவந்திருந்தாலும் திரையரங்குகளில் வெளிவரும்வரை பொறுத்திருந்து கண்டு களித்ததாகச் சொன்னார் மோகன் ஹரிவர்தினி, 21.

பொறுத்தது வீண்போகவில்லையென்றும் திரைப்படத்தின்வழி விஜய் தமிழ்நாட்டு மக்கள்மீது வைத்திருக்கும் அன்பையும் அக்கறையையும் உணர முடிகிறது என்றும் அவர் கூறினார்.

“இந்தப் படம் வெறும் திரைப்படமாக மட்டுமல்லாமல் ஓர் உணர்வாக இருந்தது,” என்றார் லோகநாதன் சுஷாந்த், 21.

காட்சி முடியும் தருவாயில் அது தொடர வேண்டுமென்று விரும்பிய அவர், இனி புதிய விஜய் திரைப்படங்கள் எவற்றையும் கண்டு ரசிக்க முடியாதென்பதை மனம் ஏற்க மறுக்கிறது என்றார்.

திரைப்படம் முழுவதும் சண்டைக் காட்சிகள், நகைச்சுவை, உணர்வுபூர்வக் காட்சிகள், நடனம் என ரசிகர்களுக்கு முழு விருந்தைப் படைக்க ‘ஜனநாயகன்’ முயற்சி செய்துள்ளது.

அரசியல் வசனங்களும் அறநெறிக் கருத்துகளும் திரைப்படத்தில் அதிகம் இடம்பெற்றிருந்தன. மக்களை மூன்று மணி நேரம் துடிப்புடனும் உற்சாகத்துடனும் வைத்திருக்கும் வண்ணம் திரைக்கதை அமைந்துள்ளது.

ஜனரஞ்சக ரசிகர்களுக்கான திரைப்படமாக அமைந்துள்ளது ‘ஜன நாயகன்’.

குறிப்புச் சொற்கள்