பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘அகத்தியா’ படத்தின் முதல் சுவரொட்டியைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்ட்ராபெர்ரி’ படத்தின் மூலம் பாடலாசிரியர் பா.விஜய் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தைத் தொடர்ந்து 2018ல் வெளியான ‘ஆருத்ரா’ படத்தை இயக்கினார்.
இரண்டு படங்களிலும் அவரே நடித்தார். அடுத்து அவர் ஜீவாவை வைத்து ‘அகத்தியா’ படத்தை இயக்கியுள்ளார்.
நீண்ட நாட்களாக படம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகாத நிலையில், தற்பொழுது படத்தின் சுவரொட்டியை வெளியிட்டு இருக்கிறார்கள். கையில் தீப்பந்தம் ஏந்திக்கொண்டு ஜீவா நின்றுகொண்டிருக்கிறார்.
அர்ஜூன், ராஷி கண்ணா ஆகியோர் திகைப்புடன் காணப்படுகின்றனர். படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை.

