வெள்ளித்திரை போன்று சின்னதிரைக் கலைஞர்களுக்கும் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில், நடிகர் விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டின் ‘டெலிவிஷன் டாக் ஆஃப் த இயர்’ (Television Talk of the year) விருது அளிக்கப்பட்டுள்ளது.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்காக இந்த விருதைப் பெற்றுக்கொண்ட அவர், பின்னர் நிகழ்வில் பேசும்போது, தாம் ஏற்கெனவே ‘மாஸ்டர் செஃப்’, ‘நம்ம ஊரு ஹீரோ’ ஆகிய இரு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாகக் குறிப்பிட்டார்.
இதுபோன்ற நிகழ்ச்சிகளில் உங்களுடைய உள்ளுணர்வு இயல்பாகவும் சரளமாகவும் வெளிப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அதைக் கச்சிதமாகச் செய்தால் நாம் பேசுவது குறைவாகவே இருக்கும் என்றார்.
மேலும், எப்போதுமே மனத்தில் இருப்பதைப் பேசுவதுதான் தனது இயல்பு என்றும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை அனைத்து வார நாள்களும் பார்க்கத் தாம் தவறியதில்லை என்றும் கூறினார்.
விஜய் சேதுபதி சில தொலைக்காட்சித் தொடர்களிலும் தலைகாட்டியுள்ளார் என்பதுதான் மற்றொரு சுவாரசிய தகவல்.
“ஒரு காலத்தில் நான்கைந்து தொடர்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு அலைந்து திரிந்தும் பலனில்லை. அப்போது பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் ஒரு வாய்ப்பு கொடுத்தார்.
“எட்டு மாதங்கள் நடித்தேன். அந்தக் காலகட்டம் நடிப்புப் பட்டறையைப் போலவும் நல்ல பயிற்சியாகவும் அமைந்தது. குறிப்பிட்ட ஒரு காட்சியில் ‘குழந்தையைக் காணோம்’ எனச் சொல்லி கதறியழ வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
”அதில் நடித்து முடித்தபோது படப்பிடிப்புத் தளத்தில் இருந்த யாரோ ஒருவர், ‘நன்றாக நடித்தாய்’ எனச் சொன்னது கேட்டது. அதுதான் ஒரு நடிகனாக எனக்குக் கிடைத்த முதல் பாராட்டு,” என்றார் விஜய் சேதுபதி.