தமிழ் சினிமா இன்று தமிழகம் மட்டுமின்றி, சீனா, ஜப்பான் மக்களைக்கூட வசீகரித்துள்ளது.
இன்றைக்கு தமிழ் சினிமா எட்டு வழிச் சாலையாக பரந்து விரிந்திருக்கிறது. ஆனால் ஒத்தையடி பாதை போட்டவர்களை மறக்க முடியுமா?
தமிழ் சினிமாவின் முதல் சாதனைகளை, முன்னோடிகளை கொஞ்சம் திரும்பிப் பார்ப்போமா?
தமிழ் சினிமாவின் முதல் ஸ்டுடியோ இந்தியா ஃபிலிம் கம்பெனி. 1916ல் இந்நிறுவனத்தை உண்டாக்கியவர் நடராஜ முதலியார்.
தமிழ் சினிமாவின் முதல் படம் 1917ல் உருவான ‘திரௌபதி வஸ்திரபரணம்’. இதை தயாரித்து இயக்கியவர் நடராஜ முதலியார். ஆனால் இது பேசாப் படம்.
தமிழின் முதல் பேசும் படம் 1931ல் வெளிவந்த ‘காளிதாஸ்’ திரைப்படம். இது மும்பையில் எடுக்கப்பட்டது.
தமிழ்த் திரையின் முதல் கதாநாயகி ‘காளிதாஸ்’ நாயகி டி.பி. ராஜலட்சுமி.
தமிழில் படமான முதல் நாவல், வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய ‘மேனகா’. இது ராஜா சாண்டோ இயக்கத்தில் டி.கே.சண்முகம் பிரதர்ஸ் நடித்து, தயாரித்து, ‘மேனகா’ என்ற பெயரில் 1935ல் வெளியானது.
தொடர்புடைய செய்திகள்
தமிழில் முதல் பெண் இயக்குநர், தயாரிப்பாளர் என்கிற பெருமை உடையவர் டி.பி.ராஜலட்சுமி. 1936ல் வந்த படம் மூலம் இப்பெருமை கிட்டியது.
தமிழின் முதல் இரட்டை வேடப் படம், 1940ல் வெளியான ‘உத்தம புத்திரன்’. இதில் பி.யூ.சின்னப்பா நாயகனாக நடித்தார். பின்னர் சிவாஜியும் இதே தலைப்பில் ஒரு படத்தில் நடித்தார்.
தமிழின் முதல் பேசும் படத் தயாரிப்பாளர் அர்தேஷ் இரானி. 1931ல் வெளியான காளிதாஸ்.
தமிழின் முதல் பேசும் பட இயக்குநர் 1931ல் வந்த ‘காளிதாஸ்’ படத்தை இயக்கிய ஹெச்.எம்.ரெட்டி.
சென்னையில் தயாரான முதல் தமிழ் பேசும் படம் ஏ.நாராயணன் இயக்கிய, 1934ல் வந்த ‘சீனிவாச கல்யாணம்’.
தமிழின் முதல் ஒலிப்பதிவாளர் மீனாட்சி நாராயணன். 1934ல் வெளியான ‘சீனிவாச கல்யாணம்’ படத்தில் பணியாற்றியவர்.
தமிழின் முதல் பெண் இசையமைப்பாளர் ராஜம் புஷ்பவனம். 1937ல் வந்த ‘ராஜசேகரன்’ படமே அவர் இசையமைத்த முதல் படம்.
தமிழில் அதிக நாள்கள் ஓடிய படம் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்து, 1944ல் வெளியான ‘ஹரிதாஸ்’ படம்தான்.
1944ல் தீபாவளியன்று வெளியான ‘ஹரிதாஸ்’ படம், 1945 தீபாவளி, 1946 தீபாவளி என மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடியது.
முதன் முதலாக வெளிநாட்டில் எடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்படம் 1937ல் வந்த ‘நவயுவன்’. லண்டன் நகரில் படம் பிடிக்கப்பட்டது.
அதிக பாடல்கள் கொண்ட தமிழ்த் திரைப்படம், 1934ல் வந்த ‘ஸ்ரீ கிருஷ்ண லீலா’. இதில் 62 பாடல்கள் இடம்பெற்றது.
தமிழில் ‘டப்பிங்’ செய்யப்பட்ட முதல் படம் 1943ஆம் ஆண்டில் வெளியான கன்னடப் படமான ‘ஹரிச்சந்திரா’.
தமிழில் முதல் திரையரங்கம், 1905ல் திருச்சி சுவாமிக்கண்ணு வின்சென்ட் தொடங்கிய ‘எடிசன் சினிமாட்டோகிராஃப்’ திரையரங்கைச் சொல்லலாம்.
ஆனால் இது ‘மொபைல்’ தியேட்டராகவே இருந்தது. ஊர் ஊராக கருவியை தூக்கிச் சென்று, படம் காட்டினர்.
முதல் கட்டடத் திரையரங்கு, சென்னையில் 1941ல் வெங்கையா கட்டிய ‘கெயிட்டி’ திரையரங்கு.
முதல் தமிழ்ச் சினிமா பத்திரிகை 1934ல் வந்த ‘சினிமா உலகம்’. ஆசிரியர், வெளியீட்டாளர் பி.எஸ். செட்டியார்.
முதன் முதலில் வெளிநாட்டில் திரையிடப்பட்ட படம், 1959ல் சிவாஜி நடிப்பில் வந்த ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’.
எகிப்து தலைநகர் கெய்ரோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
தமிழின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படம் 1973ல் சிவாஜி நடித்து வெளிவந்த ‘ராஜ ராஜ சோழன்’.
தமிழின் முதல் 70 எம்எம் திரைப்படம் 1986ல் ரஜினிகாந்த நடிப்பில் வெளிவந்த ‘மாவீரன்’.
தமிழின் முதல் கின்னஸ் சாதனையாக 24 மணி நேரத்தில் எடுத்து முடிக்கப்பட்ட படம் 1999ல் வந்த ‘சுயம்வரம்’.
11 இயக்குநர்கள், 12 நாயகர்கள், 8 நாயகிகள், 4 இசையமைப்பாளர்கள் சேர்ந்து உருவாக்கிய படம் இது.
தமிழின் முதல் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற திரைப்படம், 1951ல் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான ‘மர்மயோகி’.
தமிழின் (தென்னிந்தியாவின்) முதல் வண்ணப்படம் எம்ஜிஆர் நடிப்பில் 1955ல் வெளியான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.
தமிழில் முதன்முதலில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை கே.பி. சுந்தராம்பாள்.
1939ல் வெளியான ‘நந்தனார்’ திரைப்படத்தில் நந்தனாராக ஆண் வேடமிட்டு, 16 பாடல்களைப் பாடி நடித்த அவருக்கு ஒரு லட்ச ரூபாய் சம்பளம் தரப்பட்டது.
தமிழில் ஒரு கோடி ரூபாய் வாங்கிய முதல் கதாநாயகன் ராஜ்கிரண்.
படம் 1996ல் வெளியான ‘மாணிக்கம்’.
தமிழின் முதல் பிரம்மாண்ட திரைப்படம் ஜெமினி அதிபர் வாசன் இயக்கித் தயாரித்து, எம்.கே.ராதா, டி.ஆர்.ராஜகுமாரி நடிப்பில் 1948ல் வெளியான ‘சந்திரலேகா’. அப்போது 49 லட்சம் ரூபாய் பட்ஜெட்.
தமிழின் முதல் மக்கள் தொடர்பாளர் (PRO) என்ற பிரிவை, 1958ல் வெளியான ‘நாடோடி மன்னன்’ படத்திற்காக எம்ஜிஆர் உருவாக்கினார். அந்த வகையில், முதல் பிஆர்ஓ ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன்.
தமிழின் முதல் வரிவிலக்கு பெற்ற திரைப்படம் 1961ல் சிவாஜி நடிப்பில் வந்த ‘கப்பலோட்டிய தமிழன்’.
- இப்படி தமிழ் சினிமாவின் முதல் சாதனைகளை, முதல் முன்னோடிகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.