ஒடிடி தளங்களில் அட்டகாசமான படங்கள் ஐந்து

ஒடிடி தளங்களில் அட்டகாசமான படங்கள் ஐந்து

படங்கள்: இணையம்

22 Nov 2026 - 3:00 pm

3 mins read

- வெங்கட்ராமன் ஜோவித்தா

திரையரங்குகளில் ரசிகர்களைக் கவர்ந்த முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் முதல், புதுமையான கதைக்களங்களைக் கொண்ட படைப்புகள் வரை தற்போது முன்னணி ‘ஓடிடி’ தளங்களில் அவை வரிசைகட்டி நிற்கின்றன. அவற்றில் கண்கவரும்  ஐந்தினைக் காண்போம்:

டிரோன்ஸ்

ராகவ் மிர்தாத் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘டிரோன்ஸ்’, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகியுள்ள கற்பனை திகில்-நகைச்சுவை கலந்த தமிழ்த் திரைப்படமாகும்.

மர்மமும், கனவுலகம் போன்ற விந்தைமிகு அம்சங்களும் திரைப்படத்திற்குச் சுவை சேர்க்கின்றன.

Watch on YouTube

தூக்கத்தில் நடக்கும் மாணவி, சிறிய உருவில் கலைஞர், மந்திரவாதி, ஆன்மாக்கள் சிறைவைக்கப்பட்டுள்ள பொம்மை வீடு, காதல் சாபத்திற்கு ஆளான காவல்துறை அதிகாரி ஆகியோர் பெண்களை மையப்படுத்திய இந்த விசித்திரமான கதையில் ஒன்றிணைகின்றனர். 

சித்தி இத்னானி, அஞ்சலி நாயர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில்  இடம்பெறும்  இந்தக் கதையில் சூனியக்காரியாக தேவதர்ஷினியும், துணைக் கதாபாத்திரங்களில் திராவிட் செல்வம் மற்றும் குரேஷியும் நடித்துள்ளனர். ஹரி எஸ். ஆர். இசையமைத்துள்ளார். 

ஹைக்கூ 

ஜப்பானிய கவிதை வடிவமான ‘ஹைக்கூ’ என்பது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ‘நெட்ஃபிளிக்ஸ்’ தளத்தில் வெளியாகியுள்ள, நகைச்சுவை இழையோடும் ஒரு தமிழ்க் காதல் திரைப்படமாகும். 

Watch on YouTube

யுவராஜ் சின்னசாமி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். முதல் காதலைத் தொலைத்த மனோ, நிவியைச் சந்தித்த பிறகு காதலில் தமக்குக் கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பை எவ்வாறு எதிர்கொள்கிறான் என்பதைப் பின்தொடர்கிறது. 

‘ஏகன்’ முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் நீதிமன்றத் திரைப்படத்திற்குப் பிறகு தமிழில் அறிமுகமாகும் ஸ்ரீதேவி அப்பல்லா, ‘மின்னல் முரளி’ புகழ் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். 

சிக்மா

‘சிக்மா’ என்பது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ‘நெட்ஃபிளிக்ஸ்’  தளத்தில் வெளியாகியுள்ள விறுவிறுப்புமிக்கத் திரைப்படமாகும். அறிமுக இயக்குநர் ஜேசன் சஞ்சய்யின் பல பாகங்கள் நிறைந்த இந்த விறுவிறுப்பான கதையில், நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஒருவராக சந்தீப் கிஷன் நடித்துள்ளார்.

சக்திவாய்ந்த எதிரிக்குச் சொந்தமான பெரும் புதையலை அவர் கைப்பற்ற முயன்றார். சந்தீப் கிஷன் ஆக்‌ஷன் காட்சிகளைத் தாங்கிப் பிடிக்க, ஃபரியா அப்துல்லா வலுவில்லாத கதாபாத்திரத்தால் முடக்கப்பட்டுள்ளார். 

ஐம் கேம் (I’m Game) 

துல்கர் சல்மான் கதாநாயகராக நடிக்கும் ‘ஐம் கேம்’, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்தில் வெளியாகியுள்ள  திரைப்படமாகும்.

நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படம், உயிரை விட அதிர்ஷ்டத்தை அதிகம் நம்பும் அஞ்சாநெஞ்சம் கொண்ட சூதாட்டக்காரனைப் பின்தொடர்கிறது.

எதிர்பாராத விதமாக கதாநாயகன் சந்திக்கும் தொடர் விபரீதங்கள் அவனது உலகத்தையே தலைகீழாகப் புரட்டிப் போடுகின்றன. 

தயாரிப்பாளராகவும் இருக்கும் துல்கர் சல்மான் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் கயாடு லோஹர், ஆண்டனி வர்கீஸ், கதிர், சம்யுக்தா விஸ்வநாதன், மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். 

பத்தா 

‘பத்தா’ என்பது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ‘நெட்ஃபிளிக்ஸ்’ தளத்தில் வெளியாகியுள்ள நகைச்சுவை-குடும்பத் திரைப்படம். 

1980களின் வடசென்னைப் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இப்படம், ஊரே அஞ்சும் உள்ளூர் தாதா ஒருவரைப் பின்தொடர்கிறது; ஒரு சிறுவனுடனான எதிர்பாராத சந்திப்பு அவனது மென்மையான பக்கத்தை வெளிப்படுத்தும் வரை அவனது ஆதிக்கம் தொடர்கிறது. 

விஜய் சேதுபதி மிகவும் இயல்பான, சிறப்பான நடிப்பை வழங்கியிருக்க, அவரது மனைவியாக லிஜோமோல் ஜோஸ் மிளிர்கிறார். இளம் நடிகர் சாய் பிருத்விராஜ் தனது பங்கிற்குச் சிறப்பாக நடித்துள்ளார்.

சாய் அபயங்கரின் வரவேற்பைப் பெற்ற இசையும், அக்காலகட்டத்தை உண்மைத்தன்மையோடு காட்டும் காட்சிகளும் பக்கபலமாக உள்ளன.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்