கடந்த இரண்டு ஆண்டுகளாக ஞாபக மறதி நோயால் அவதிப்பட்டு வருவதாகவும் படப்பிடிப்பின்போது தனது வசனத்தை நினைவுபடுத்தி பேசுவதற்குக்கூட தான் பெரிதும் சிரமப்பட்டதாகவும் மூத்த முன்னணி நடிகையான பானுப்பிரியா வருத்தப்பட்டுள்ளார்.
அவர் தெலுங்கு ஊடகத்துக்கு அளித்துள்ள நேர்காணலில், நினைவாற்றல் குறைபாடு காரணமாக ஓராண்டில் இரண்டு, மூன்று படங்களில் மட்டுமே தன்னால் நடிக்கமுடிவதாகவும் நினைவில் கொள்ளவேண்டிய விஷயங்களை அடிக்கடி மறந்துவிடுவதால் பல சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
“இப்போதெல்லாம் எனக்கு ஞாபக மறதி அதிகமாகிவிட்டது. உடல்நிலையும் அவ்வளவாக சரியாக இல்லை. ஞாபக மறதியால் அவதிப்படுகிறேன். கற்றுக்கொள்ளும் விஷயங்களை எல்லாம் உடனுக்குடன் மறந்துவிடுகிறேன்.
நடனத்திலும் எனக்கு ஆர்வம் இல்லாமல் போய்விட்டது. வீட்டில்கூட நடனப் பயிற்சி செய்வதில்லை,’’ என்று வேதனையுடன் கூறியுள்ளார்.
1980களில் தனது தனித்துவமான நடிப்புத்திறன், வசீகரத் தோற்றம், மிதக்கும் கண்கள் மூலம் தென்னிந்தியத் திரை ரசிகர்களைக் கவர்ந்தவர் பானுப்பிரியா. ஐந்துக்கும் மேலான மொழிகளில் வெற்றிபெற்ற பல படங்களிலும் இவர் முக்கிய வேடங்களில் நடித்தவர்.
ஆந்திராவைச் சேர்ந்த இவர் நடிகையாக மட்டுமன்றி திறமையான நடனக் கலைஞராகவும் ஜொலித்தவர்.
நீண்ட காலமாக சினிமாவில் இருந்து விலகி இருந்தவர், அண்மைகாலமாக ஒரு சில படங்களில் அம்மா வேடங்களில் நடித்து வருகிறார்.
திருமணமாகி கணவருடன் அமெரிக்காவில் வசித்து வந்த பானுப்பிரியா, சினிமாவில் தொடர்ந்து நடிக்கவேண்டும் என்ற ஆவலுடன் கணவருடன் சண்டை போட்டு இந்தியாவுக்குத் திரும்பினார்.
தொடர்புடைய செய்திகள்
ஒரு நடனப் பள்ளியைத் திறக்கும் கனவிலும் இருந்தார்.
அந்தச் சமயத்தில் பானுப்பிரியாவை அவரது கணவர் ஆதர்ஷ் கவுஷல் விவாகரத்து செய்து விட்டதாக வதந்தி பரவியது. இதெல்லாம் உண்மையல்ல, வதந்தி என பானுப்பிரியா விளக்கம் அளித்தார்.
இந்தச் சூழலில், திடீரென அவரது கணவர் ஆதர்ஷ் கவுஷல் மரணம் அடைந்தார்.
இதனால் மனமுடைந்து போன பானுப்பிரியாவின் உடல்நிலை பலவீனமானது. இப்போது பானுப்பிரியா தனது ஒரே மகளுக்காக வாழ்ந்து வருகிறார்.
மகள் அபிநயா இப்போது லண்டனில் படித்து வருகிறார். மகளுக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்றும் பேட்டியில் கூறியுள்ளார் பானுப்பிரியா.

